பள்ளியில் சுருண்டு விழுந்த மாணவி பரிதாப பலி - திருப்பூர் அருகே அதிர்ச்சி
தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த கந்தேஸ்வரி என்ற 14 வயது மாணவி, நாதம்பாளையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். காலில் இரத்தக்குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்ட கந்தேஸ்வரி, கடந்த 2 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்ற கந்தேஸ்வரி காலையில் நடைபெற்ற இறை வழிபாட்டில் பங்கேற்றுள்ளார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்ததை அடுத்து பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக கந்தேஸ்வரியை அவிநாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக அவர் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.