(28.07.2023) ஊர்ப்பக்கம் | Oorpakkam
- மதுரை ஆரப்பாளையம் அருகே, மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையை கண்டித்து ஏராளமான கல்லூரி மாணவிகள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். பாத்திமா கல்லூரி வாயிலில் இருந்து ஆலமர பேருந்து நிறுத்தம் வரை நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும் என பதாகைகளை மாணவிகள் ஏந்தி நின்றனர்.
- திருவாரூரில், அரசு கலைக்கல்லூரியின் வகுப்பறையில் இருந்த 19 மின்விசிறிகளை திருடிச்சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டடத்தின் இரண்டாம் தளத்தில் இருந்த 10 வகுப்பறைகளின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் அங்கிருந்த மின்விசிறிகளை கழட்டிச்சென்றனர். சுமார் 2,500 மாணவர்கள் பயிலும் இக்கல்லூரியில் சுற்றுசுவர் இல்லாத காரணத்தால் இதுபோன்ற செயல்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
- காஞ்சிபுரம் மாநகராட்சியில் நடைபெற்ற வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர் தேர்தலில் திமுக கூட்டணியினர் வெற்றி பெற்றனர். அதேநேரம் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வார்டுகளில் சரிவர பணிகள் நடைபெறாததாக கூறி அதிமுக கூட்டணிக்கட்சி உறுப்பினர்கள் 16 பேர் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- நெல்லை மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு தேர்தல் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையின் போது, திமுக மாவட்ட பொறுப்பாளர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி திமுக மண்டல சேர்மன்கள் மாநகராட்சி கூட்டரங்கில் தர்ணாவில் ஈடுபட்டனர். இவ்விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி முடிக்காமல் கூட்டத்தை நடத்தக்கூடாது என தொடர்ந்து கவுன்சிலர்கள் கோஷம் எழுப்பியதால் கூட்டம் முடிவு பெற்றதாக மேயர் அறிவித்தார். மேலும் தேர்தலில், திமுக மாவட்ட செயலாளர் அறிவித்த 9 பேரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவினர் 3 பேர் வெற்றி பெற்றனர்.
Next Story