மாணவரிடமிருந்து கூடுதலாக வசூலித்த கல்விக் கட்டணம் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
மாணவரிடமிருந்து கூடுதலாக வசூலித்த கல்விக் கட்டணத்தை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டுமென, தனியார் பொறியியல் கல்லூரிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அசோக்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2011-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், கல்விக் கட்டணமாக ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய், வங்கியின் கல்விக் கடன் மூலம் செலுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதாலும், குடும்பத்தில் முதல் பட்டதாரி என்பதாலும் அரசின் உதவித் தொகையும் கல்லூரிக்கு நேரடியாக செலுத்தப்பட்ட நிலையிலும், தன்னிடம் கல்லூரி நிர்வாகம் கூடுதல் கட்டணம் வசூலித்துள்ளதாக தெரிவித்திருந்தார். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டபோதும், துறை சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் அவர் தெரிவித்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலைக்கழகம் பதிவாளருக்கு உத்தரவிட்டார். மேலும், மனுதாரரிடம் வசூலித்த கூடுதல் கல்வி கட்டணத்தை வட்டியுடன் திரும்ப செலுத்த கல்லூரி நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.
Next Story