மன்னிப்பு கடிதம் கேட்டு பேராசிரியர் நிர்பந்தம்? - விரக்தியில் மாணவி எடுத்த அதிர்ச்சி முடிவு
தென்காசி அருகே மன்னிப்பு கடிதம் கேட்டு கல்லூரி பேராசிரியர் நிர்ப்பந்தம் செய்ததாக கூறி கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
தென்காசி அருகே மன்னிப்பு கடிதம் கேட்டு கல்லூரி பேராசிரியர் நிர்ப்பந்தம் செய்ததாக கூறி கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சங்கரன்கோவில் அருகே உள்ள சிந்தாமணி மேலரத வீதியை சேர்ந்தவர் மாடத்தி அம்மாள். கணவர் உயிரிழந்த நிலையில் கூலி வேலை பார்த்து தன் மகள் இந்து பிரியாவை வளர்த்து வந்தார். இவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் பி.காம். முதலாமாண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு செல்போன் கொண்டு வர தடை உள்ள நிலையில் மாணவி இந்து பிரியா கடந்த 8ஆம் தேதி செல்போன் கொண்டு வந்ததாக பேராசிரியர் முத்துமணி கூறி உள்ளார். அந்த செல்போன் தன்னுடையது இல்லை என்றும், மற்றொரு மாணவியின் செல்போனை வாங்கி படம் பிடித்தேன் என கூறிய போதிலும் பேராசிரியர் இந்து பிரியாவிடம் மன்னிப்பு கடிதம் கேட்டுள்ளார். இதனால் விரக்தியடைந்த மாணவி, கடிதம் எழுதி வைத்து விட்டு தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த கடிதத்தில் பேராசிரியர் முத்துமணியே தன் மரணத்திற்கு காரணம் என தெளிவாக எழுதி வைத்துள்ளார். மாணவியின் மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பேராசிரியரை கைது செய்யும் வரை உடலை வாங்க போவதில்லை என கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story