"நடைபயிற்சியின் போது வெட்டி படுகொலை" : ராமஜெயம் கொலை வழக்கு - கடந்துவந்த பாதை
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை கடந்துவந்த பாதை
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை கடந்துவந்த பாதையை காணலாம்...
கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி திருச்சியில் நடைபயிற்சி சென்ற, தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் போலீசார் குற்றவாளியை நெருங்க முடியாத நிலையில், 2012 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
இதனையடுத்தும் விசாரணையில் முன்னேற்றமும் காணப்படாத நிலையில், விசாரணையை சிபிஐக்கு மாற்றுமாறு அவரது மனைவி லதா, 2014 டிசம்பர் 11 ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார்.
வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த சிபிசிஐடி போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
2017 செப்டம்பரில் வழக்கு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என சிபிசிஐடி அறிவித்தது.
தொடர் விசாரணையில் சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளி யார் என்பதை உறுதி செய்யமுடியாத நிலை தொடர்ந்தது.
இதனையடுத்து 2017 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பல ஆண்டுகள் ஆகியும் குற்றவாளியை நெருங்க முடியாத நிலை தொடர்ந்தது.
இந்த நிலையில் வழக்கை மாநில காவல்துறையே விசாரிக்க வேண்டும் என ராமஜெயத்தின் சகோதரர் கே.என். ரவிசந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு குறித்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சிபிஐ அதிகாரி அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளது.
Next Story