ஆன்லைன் விசாரணையில் ஒழுங்கீனமாக நடந்த வழக்கறிஞர்..!
ஆன்லைன் விசாரணையில் ஒழுங்கீனமாக நடந்த வழக்கறிஞர்..!
காணொளி காட்சி விசாரணையின் போது பெண்ணிடம் வழக்கறிஞர் ஒருவர் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட செயலால் பதவியை ராஜினாமா செய்து விடலாம் என்று நினைத்ததாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்ற காணொலி காட்சி விசாரணையின் போது, நீதிபதி ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பித்து கொண்டிருக்கையில்,
வழக்கறிஞர் ஒருவர், பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள், சம்மந்தப்பட்ட வழக்கறிஞரை தொழில் செய்ய தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்ததோடு, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா ஆஜராகி, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். அத்துடன், சம்பந்தப்பட்ட வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பார் கவுன்சில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை பணி இடைநீக்கம் செய்துள்ளதாக கூறி விசாரணை அறிக்கைகளை தாக்கல் செய்தார். இதையடுத்து,
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் நேரில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த மாதம் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். முன்னதாக வேறு ஒரு வழக்கு விசாரணையின் போது, இந்த சம்பவத்தை குறிப்பிட்ட நீதிபதி பி. என். பிரகாஷ், "இந்த சம்பவம் மிகப் பெரிய அசிங்கம்" என்றும் "பதவியை ராஜினாமா செய்து விடலாமா?" என்று யோசித்ததாகவும் வேதனை தெரிவித்தார்.
Next Story