முதல்வர் முன்னிலையில் முதலீட்டாளர் மாநாடு - 10 வணிக திட்டங்கள் தொடக்கம்
கோவையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஏராளமான நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்..
கோவையில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார்.
அவரது முன்னிலையில் 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதன் மூலம் 34 ஆயிரத்து 723 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 74,835 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TVS, L&T, டால்மியா, ஹிந்துஸ்தான் யூனிலிவர், கிம்ஸ் உட்பட மொத்தம் 52 நிறுவனங்கள் முதலீடு செய்ய உள்ளன.
இதேபோல, வான்வெளி மற்றும் பாதுகாப்புத்துறையில் 485 கோடி ரூபாய் மதிப்பில், 1960 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இதன்மூலம் கோவை, காஞ்சிபுரம், வல்லம் வடகால், ஓசூர், சேலம், திருச்சி உள்ளிட்ட 7 இடங்களில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறை உதிரி பாக உற்பத்தி ஆலைகள் நிறுவப்பட உள்ளன.
இதைத்தவிர வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறையில் உற்பத்தியை மேம்படுத்த 212 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறன்மிகு மையம் நிறுவப்பட உள்ளது.
இதற்காக டசால்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தொடர்ந்து 3,928 கோடி ரூபாய் முதலீட்டில் 3,944 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் 10 வணிக திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
கோவை முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் மொத்தம் 82 திட்டங்கள் வாயிலாக 52 ஆயிரத்து 549 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 92,420 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இறுதியாக தமிழ்நாடு நிதிநுட்பக் கொள்கை 2021-ஐ முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்
இதன் பயனாக சென்னையில் பொருளாதாரம் சார்ந்த நிதிநுட்ப நகரம்,
பெருநகரங்களில், நியோ டைடல் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்பட உள்ளன.
Next Story