சொத்துக்காக தந்தை, தாய், தம்பியை கொன்ற கொடூரம் - கணவன், மனைவிக்கு 4 தூக்கு தண்டனை
திண்டிவனத்தில் சொத்துக்காக தந்தை, தாய், தம்பியை பெட்ரோல் குண்டு வீசி கொன்ற வழக்கில் கணவன், மனைவிக்கு 4 தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜி. வெல்டிங் பட்டறை உரிமையாளரான அவருக்கு கோவர்த்தனன், கவுதம்
என்ற 2 மகன்கள் உள்ளனர் . கவுதமும், அவரது தாய் கலைச்செல்வியும் வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்து வந்தனர்.
கோவர்த்தனனுக்கும், செஞ்சி பகுதியை சேர்ந்த தீப காயத்திரிக்கும் திருமணம் நடைபெற்றதையடுத்து அனைவரும் பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு கலைச்செல்வியும், கவுதமும் ஒரு அறையில் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர்.அவர்களது தந்தை ராஜி வீட்டின் வராண்டாவில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அண்ணன் கோவர்த்தனனிடம் போலீசார் விசாரணை நடத்திய போது , ஏ.சி. இயந்திரம் வெடித்து தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.
சம்பவ அறையில் கிடந்த உடைந்த பாட்டில்களின் துகள்கள், ரத்தக்கறை உள்ளிட்டவை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
ராஜியின் உடலில் கத்தியால் வெட்டிய காயங்கள் இருந்துள்ளன. இதையடுத்து, 3 பேரும் கொலை செய்யப்பட்டதை உறுதி செய்த போலீசார், கோவர்த்தனனை பிடித்து தீவிரமாக விசாரித்த போது, பெற்றோர் மற்றும் சகோதரரை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.
இதற்கு கோவர்த்தனின் மனைவி தீப காயத்திரியும் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
கவுதமுக்கு அதிக சொத்து கொடுக்க போவதாக பெற்றோர் கூறி வந்ததால் ஆத்திரமடைந்த கோவர்த்தனன் மனைவியுடன் சேர்ந்து தாய், தந்தை , தம்பியை கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றம், கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால், கோவர்த்தனன் மற்றும் அவரது மனைவிக்கு தலா 4 தூக்கு தண்டனையும், 2 ஆயுள் தண்டனையும், தலா 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
Next Story