"மோசடி பேர்வழிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்" - பொதுமக்களை எச்சரித்த சென்னை காவல் ஆணையர்

குலுக்கல் முறையில் பரிசு, வங்கியில் வேலை என விதவிதமாக கூறி மக்களிடம் பண மோசடியில் ஈடுபடுவதாக அடுக்கடுக்கான புகார்கள் வரும் நிலையில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
மோசடி பேர்வழிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள் - பொதுமக்களை எச்சரித்த சென்னை காவல் ஆணையர்
x
சமீப காலங்களாக நடக்கும் குற்றங்களில் போலீசாருக்கு பெரும் சவாலாக இருப்பது, சைபர் கிரைம் குற்றங்கள்... குலுக்கல் முறையில் பரிசு விழுந்துள்ளது, வங்கிக் கணக்கு முடங்கி விட்டது என செல்போனில் வரும் எஸ்எம்எஸ்களை பார்த்து பதறிப்போகும் மக்கள் அதே செய்தியில் உள்ள லிங்க்கை அனுப்பினால் அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் பறிபோவதாக அடுக்கடுக்கான புகார்கள் காவல்துறைக்கு வந்த வண்ணம் உள்ளன. 

சமீபத்தில் கூட சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஸ்நாப்டீல் என்ற பெயரில் வந்த எஸ்எம்எஸ்சை நம்பி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த சம்பவம் அரங்கேறியது. 

பொதுவாக எஸ்எம்எஸ்ஸில் வரும் எந்த ஒரு லிங்கையும் க்ளிக் செய்ய கூடாது என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். காரணம் செல்போன் எண்ணுடன் வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த லிங்கை க்ளிக் செய்தால் அது நேரடியாக வங்கிக் கணக்கை சென்றடைந்து அவர்களின் கணக்கில் உள்ள பணம் திருடு போவது வாடிக்கையாகி வருகிறது. 

இதேபோல் பிரபல நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி வேலை வாய்ப்பு என கூறியும் அதிகளவில் மோசடி நடக்கிறது. வேலை தேடி அலையும் இளைஞர்கள் பலரும் இதுபோன்ற கும்பலிடம் சிக்கி தங்கள் பணத்தை தொலைப்பதும் தொடர்கதையாகி வருகிறது... 

பிரபல வங்கிகளின் பெயரிலும் எஸ்எம்எஸ்களை சைபர் மோசடி கும்பல் அனுப்புகிறது. உங்களின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டது. மீண்டும் அதை ஆக்டிவேட் செய்ய இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள் என தத்ரூபமாக வங்கி அனுப்புவது போல அனுப்பி பணத்தை திருடுவதும் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. 

இதுபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான புகார்கள், மத்திய குற்றப்பிரிவுக்கு வந்த வண்ணம் உள்ளதாக கூறும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இதுபோன்ற கும்பலிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். 

இணைய தளங்களிலோ, முகநூல், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களிலோ வெளிநாட்டவர் எனக்கூறி பழகும் நபர்களுடனும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

மேட்ரிமோனியல் தளங்களில் திருமணத்திற்கோ அல்லது மறுமணத்திற்கோ பதிவு செய்யும்போது வரனை நேரில் பார்க்காமல் எந்த வித பொருளும், பணமும் தர வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்