விவசாயிகளை ஏமாற்றி ரூ.50 கோடி மோசடி
தஞ்சாவூர் அருகே 50 கோடி ரூபாய் மோசடி செய்த தனியார் சர்க்கரை ஆலையின் 100 ஏக்கர் நிலத்தை கைப்பற்றும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே திருமங்கலக்குடியில் திருஆரூரான் சர்க்கரை ஆலை இயங்கி வந்தது. விவசாயிகளிடம் இருந்து கரும்புகளை கொள்முதல் செய்து நிலுவைத் தொகையை வழங்காமல் மோசடி செய்தது. விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியதால், 2017 ஆம் ஆண்டு சர்க்கரை ஆலை மூடப்பட்டது. இதற்கிடையில் 213 விவசாயிகளை ஏமாற்றி கையெழுத்து வாங்கி, தேசிய வங்கியில் 50 கோடி ரூபாய் வரை சர்க்கரை ஆலை நிர்வாகம் கடன் வாங்கியது. இதையறிந்து ஆத்திரமடைந்த விவசாயிகள், வடசறுக்கையில் ஆலை நிர்வாகத்திற்கு சொந்தமான 100 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 30-க்கும் மேற்பட்ட டிராக்டரில் நிலத்தை உழவு செய்தும், தங்கள் எதிர்ப்பை காட்டினர். சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் மதுசூதனன், விவசாயிகள் மற்றும் ஆலை நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். நிலுவைத் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து, போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்துச் சென்றனர்.
Next Story