சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' பட பாணியில், 6 லட்சம் கொள்ளை

சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் பட பாணியில், போலி வருமான வரித்துறை அதிகாரிகள் வீடு புகுந்து 6 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். அப்பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வரும் இவர், அ.தி.மு.க.வில் முக்கிய நிர்வாகியாகவும் உள்ளார். இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி மதியம், அவரது வீட்டிற்கு இன்னோவா காரில் 6 பேர் கொண்ட ஒரு குழுவினர் அதிரடியாக வந்த இறங்கினர். டிப் டாப்பாக தெரிந்த அவர்களில், ஒரு பெண்ணும் அடங்குவார். வீட்டில் இருந்தவர்களிடம் தாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் என்றும் உங்கள் வீட்டில் சோதனை நடத்த உள்ளதாகவும் அதிகார தோணியில் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ந்து போன கண்ணன், தான் முறையாக வருமான வரி செலுத்தி உள்ளதாகவும், அதற்கான ஆவணங்களை காண்பிக்க தயார் எனவும் கூறியுள்ளார். இதற்கு அந்த குழுவினர், வீட்டை சோதனை நடத்தவிடாமல் தடுத்தால், சிறை செல்ல வேண்டி இருக்கும் என மிரட்டி உள்ளனர். மேலும் வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களை பறித்து சுவிச் ஆப் செய்துள்ளனர். இதை தொடர்ந்து நடைபெற்ற சோதனையில், வீட்டில் இருந்த 6 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்த போலி அதிகாரிகள், உரிய ஆவணங்களை காண்பித்து வேலூர் வருமான வரித்துறை அலுவலத்தில் பெற்று கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றுள்ளனர். இதையடுத்து கண்ணன் தனது ஆடிட்டர் மூலம் வேலூர் வருமான வரி அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது, அதுபோன்ற எந்த சோதனையும் தாங்கள் மேற்கொள்ளவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதன்பின் தான் கண்ண‌னுக்கு தன் வீட்டில் நடைபெற்றது போலி வருமான வரி சோதனை என்றும், வந்தவர்கள் உண்மையான அதிகாரிகள் இல்லை என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து வேலூர் வருமான வரித்துறை அலுவகத்தில் கண்ணன் புகார் அளித்தார். இதையடுத்து வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அந்த கும்பல் பயன்படுத்திய கார் போலி பதிவு எண்ணை கொண்டது என்பது தெரியவந்துள்ளது. போலி வருமான வரித்துறை அதிகாரிகளை பிடிக்க ராணிப்பேட்டை போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கி உள்ளனர். சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட பாணியில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்