கொரோனாவால் பறிபோன வாழ்வாதாரம் - வாழ்வாதாரத்திற்காக திருட்டில் இறங்கிய அவலம்
கொரோனாவால் வாழ்வை இழந்து திருட்டு தொழிலில் இறங்கி 120 ரூபாயை திருடி மாட்டிக் கொண்ட 3 பேரை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
கொரோனாவால் வாழ்வை இழந்து திருட்டு தொழிலில் இறங்கி 120 ரூபாயை திருடி மாட்டிக் கொண்ட 3 பேரை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த அய்யலூர் பகுதியை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி. இவரின் நண்பர்கள் சந்திரசேகர் என்கிற கொத்தவரங்காய், மற்றும் சின்னன். 3 பேரும் ஒன்று சேர்ந்து மரங்களில் இருக்கும் தேனை எடுத்து அதனை விற்று பிழைப்பு நடத்துவது வழக்கம். ஆனால் கொரோனாவால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படவே, வறுமையில் தவித்து வந்தனர் 3 பேரும்... என்ன செய்வதென தெரியாமல் அவர்கள் தவித்து வந்தனர். இந்த நிலையில் குட்டம் பகுதியில் உள்ள வீட்டின் அருகே இருந்த மரத்தில் தேன் எடுக்க 3 பேரும் சென்றுள்ளனர். அப்போது அந்த வீடு பூட்டியிருப்பதை அறிந்த அவர்களுக்கு கொள்ளையடிக்கும் எண்ணம் உருவானது. இதற்காக திட்டமிட்ட அவர்கள், அன்றைய தினம் இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பீரோவை திறந்து பார்த்த போது அதில் 120 ரூபாய் மற்றும் 13 கிராம் தங்கம் மட்டுமே இருந்தது. இதனை எடுத்துக் கொண்டு சென்ற அவர்கள் வழக்கம் போல தங்கள் வேலையை பார்த்தனர். இதனிடையே வீட்டின் உரிமையாளர் வந்து பார்த்த போது கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. ஆனால் பீரோவில் ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் நாலே முக்கால் சவரன் நகை இருந்ததாக உரிமையாளர் பொய் கணக்கு காட்டியுள்ளார். இதனிடையே போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்த போது கொள்ளையர்கள் சிக்கினர். அப்போது அவர்களிடம் நடந்த விசாரணையில் கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டனர். வெறும் 120 ரூபாய் மற்றும் 13 கிராம் தங்கம் மட்டுமே இருந்தததாகவும், அதனை மட்டுமே திருடியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 3 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story