நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு - உயர்நீதிமன்றத்தில் பா.ஜ.க. வழக்கு
நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து. ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க, உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், 9 பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு, ஜூன் 10ம் தேதி அரசாணை பிறப்பித்தது.இந்த அரசாணைக்கு தடை விதிக்க கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், தமிழக பா.ஜ.க. பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்துக்கு முரணாக மாநில அரசு செயல்பட முடியாது எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையிலும், தேசிய நலனின் அடிப்படையிலும், நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் மாநில அரசு, இந்த விவகாரத்தை அரசியலாக்க கூடாது எனவும், ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்க ஏதுவாக அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஏ.கே.ராஜன் குழு பரிந்துரை வழங்கினாலும், அதை அமல்படுத்த முடியாது எனவும், தமிழகத்துக்கு நீட் தேர்வில் எந்த விலக்கும் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளதாகவும், மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின் அடிப்படையிலும், மக்களின் கோரிக்கை அடிப்படையிலும் இந்த குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும், வழக்கு தொடர்பாக பதிலளிப்பதாகவும் தெரிவித்தார்.இதையடுத்து, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு முரணாக மாநில அரசு செயல்பட முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த குழு அமைக்க உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா எனக் கேள்வி எழுப்பி, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை 5 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Next Story