ஸ்ரீதர் வேம்பு யார்...? ஸ்ரீதர் வேம்புவின் வெற்றிப்பயணம்
தஞ்சாவூரில் பிறந்து, தமிழ் மொழியில் படித்து, சிலிகான் வேலியில் வெற்றிக்கொடியை பறக்கவிட்ட ஸ்ரீதர் வேம்புக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை அறிவித்துள்ளது. இந்நிலையில் அவருடைய வெற்றி பாதை குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...
தஞ்சாவூரில் பிறந்து, தமிழ் மொழியில் படித்து, சிலிகான் வேலியில் வெற்றிக்கொடியை பறக்கவிட்ட ஸ்ரீதர் வேம்புக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை அறிவித்துள்ளது. இந்நிலையில் அவருடைய வெற்றி பாதை குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...
புத்திசாலித்தனமான, அதிகம் அறியப்படாத ஒரு தொழில் முனைவரான சோகோ (ZOHO) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, 1967ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் உமையாள்புரம் கிராமத்தில் பிறந்தவர்.
தந்தை, உயர்நீதிமன்றத்தில் எழுத்தராக பணியாற்றியதால் சென்னையில் வளர்ந்த அவர், கிழக்கு தாம்பரம் ஜெய்கோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பை, 1985 ஆம் ஆண்டு முடித்தார்.சென்னை ஐ.ஐ.டி.யில் இளங்கலை பொறியியல் முடித்த பின்னர், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் படிக்க சேர்ந்தார், ஸ்ரீதர் வேம்பு...1994 ஆம் ஆண்டு சாண்டியாகோவில் உள்ள குவால்காம் நிறுவனத்தில் வயர்லெஸ் சிஸ்டம் இன்ஜினியராக அவர் பணியாற்றினார். எளிமையானவர் மற்றும் நிதானமாக சிந்திக்கக் கூடியவருமான ஸ்ரீதர் வேம்பு, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் தைவான் நாடுகளின் வெற்றியை ஆராய்ந்து ஒப்பிடுகையில் இந்தியாவில் ஏன் தயாரிப்புகளே இல்லை?, ஏன் ஏழ்மையாகவே இருக்கிறது என்ற கேள்விகளை தனக்குள் எழுப்பிக்கொண்டார்.அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப துறையில் இந்தியர்கள் பெருமளவில் பணியாற்றிய காலத்தில், இந்தியாவிற்கு திரும்பி கொட்டிக்கிடக்கும் அறிவுசார் திறமையை சிறப்பாக பயன்படுத்த விதையிட்டார், ஸ்ரீதர் வேம்பு...1996 ஆம் ஆண்டு சென்னை தாம்பரத்தில் சிறிய அறையில் நண்பர்கள், சகோதரர்களுடன் அட்வன்ட்நெட் (AdventNet) என்ற மென்பொருள் நிறுவனத்தை அவர் தொடங்கினார்.அட்வன்ட்நெட் நிறுவனம் 2009 ஆண்டு, சோகோ நிறுவனமானது. பின்னர், கடின உழைப்பால் சோகோ நிறுவனம் வெற்றிப்பாதையில் புதிய உச்சம் தொட்டது.தொழில்நுட்ப வளர்ச்சியில் தொழில்துறைக்கு அவசியமான க்ளவுடு அப்ளிக்கேஷனில் மிகவேகமான வளர்ச்சியை கண்ட சோகோ நிறுவனத்திற்கு அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் இருக்கும் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களாகின.இன்று அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர், ஜப்பான் உள்பட எட்டு நாடுகளில் அலுவலகங்களை கொண்டிருக்கும் சோகோ நிறுவனம் ஆண்டுக்கு 3,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நிலைக்கு வளர்ச்சி கண்டிருக்கிறது.அரட்டை என்ற செயலியுடன் சமூக வலைதள சேவையிலும் கால் பதித்துள்ளது, சோகோ நிறுவனம்.போட்டி மற்றும் ஓப்பீடுகளில் ஆர்வம் காட்டாது எளிமையான வாழ்க்கை முறையில் ஆர்வம் காட்டும் ஸ்ரீதர் வேம்பு, கிராமப்புற இளைஞர்களின் திறமையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதில் என்றும் உத்வேகத்துடன் பணியாற்றுகிறார்.தன்னுடைய சோகோ பள்ளி வாயிலாக ஏழ்மை நிலையில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கணினி மொழியை பயிற்றுவித்து தன்னுடைய நிறுவனத்திலே அவர் பணியும் வழங்குகிறார்.சிலிக்கான் வேலியிலிருந்து சென்னைக்கு நகர்ந்த அவருடைய பார்வை தற்போது கிராமபுறங்களை நோக்கி திரும்பி இருக்கிறது. கிராமத்து ஏழை குழந்தைகளின் கல்விக்காகவும் பாராட்டத்தக்க பணிகளை செய்து வருகிறார், ஸ்ரீதர் வேம்பு...எதிலும் மாற்றத்தை கொண்டுவருவதில் பெரிதும் கவனம் செலுத்தும் அவர் தென்காசி மற்றும் ரேணிகுண்டாவில் நிறுவன வளாகங்களை விஸ்தரித்து தகவல் தொழில்நுட்பத்தை கிராமங்களுக்கு கொண்டு செல்கிறார்.தனக்கு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருதை அறிவித்ததற்கு நன்றி தெரிவித்துக்கொண்ட அவர், இது மிகப்பெரிய மரியாதை என்றும் தனக்கான விருதை தன்னுடைய ஊழியர்களுக்கு அர்ப்பணிப்பதாகவும் கூறியுள்ளார்.
Next Story