பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக கூடைப்பந்தாட்ட வீராங்கனை அனிதா

18 வயதில் இந்திய கூடைப்பந்தாட்ட அணிக்கு கேப்டனாக இருந்த பெருமைக்குரிய அனிதாவுக்கு பத்மஸ்ரீ விருது தேடி வந்திருக்கிறது.
பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக கூடைப்பந்தாட்ட வீராங்கனை அனிதா
x
18 வயதில் இந்திய கூடைப்பந்தாட்ட அணிக்கு கேப்டனாக இருந்த பெருமைக்குரிய அனிதாவுக்கு பத்மஸ்ரீ விருது தேடி வந்திருக்கிறது. அவரின் விளையாட்டு சாதனைப் பயணத்தை பார்க்கலாம்...


"விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை வீரப்பெண்கள் விரைவில் ஒழிப்பராம்" என்ற மகாகவி பாரதியின் வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்துள்ளார் கூடைப்பந்து வீராங்கனை அனிதா பால்துரை.

சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட அனிதா  தன் பன்னிரண்டாவது வயதில் கூடைப்பந்து வீராங்கனையாக விளையாட்டு உலகிற்குள் காலடி எடுத்து வைத்தார். 

மிகவும் இளம் வயதிலேயே இந்திய தேசிய மகளிர் கூடைப்பந்தாட்ட அணியின் கேப்டனாக பொறுப்பேற்று  8 ஆண்டுகள் அணிக்குத் தலைமை தாங்கி சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து 9 முறை, ஆசிய கூடைப்பந்து சம்மேளன சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற ஒரே இந்திய வீராங்கனை என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் அனிதா பால்துரை.

தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப்பில் 30 பதக்கங்கள் கைப்பற்றி சாதனை படைத்த இவர், 2013-ஆம் ஆண்டு, உலகின்  மிகச்சிறந்த பத்து வீராங்கனைகளில் ஒருவராக தேர்வாகி நம் நாட்டிற்கு பெருமை தேடி தந்தார். 

தனது இளமைப்பருவம் முழுவதையும் இந்திய அணிக்காக அர்ப்பணித்து கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் இந்திய அணிக்காக விளையாடி சாதனை படைத்த அனிதாவுக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு பெருமை படுத்தியுள்ளது. 

குழந்தை பிறந்த பிறகும் இந்திய அணிக்காக விளையாடி, பெண்கள் சாதிக்க திருமணமோ குழந்தை பிறப்போ தடையல்ல என்று நிரூபித்துள்ளார், அனிதா. கடந்த எட்டு வருடங்களாக அர்ஜுனா விருதிற்கும், மூன்று வருடங்களாக பத்மஸ்ரீ விருதுக்கும் விண்ணப்பித்த அனிதாவுக்கு, நேரடியாக பத்மஸ்ரீ விருதே கிடைத்திருக்கிறது. 

தற்போது ரயில்வே அணிக்காக விளையாடி வரும் அனிதா கூடைப்பந்தாட்டத்திற்காக தனது பங்களிப்பு எப்போதும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். தான் சாதித்தது மட்டுமல்லாது, கூடைப்பந்து பயிற்சியாளராகி, பல இளம் வீராங்கனைகளை தன்னைப்போல் உருவாக்க வேண்டும் என்பதையே அனிதா பால்துரை தனது லட்சியமாகக் கொண்டிருக்கிறார். 

திறமையும், கடின உழைப்பும் இருந்தால் சூழ்நிலை ஒரு தடையல்ல என்பதை நிரூபித்து,  இளம் கூடைப்பந்து வீராங்கனைகளுக்கு முன்மாதிரியாக மாறியிருக்கிறார் அனிதா பால்துரை.


Next Story

மேலும் செய்திகள்