ஒவ்வொரு வீழ்ச்சிக்குப் பின்னும் வெற்றி - ஃபீனிக்ஸ் வடிவில் ஜெயலலிதா நினைவிடம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தன் வாழ்வில் சந்தித்த ஏற்ற, இறக்கங்களை உணர்த்தும் விதமாக, ஃபீனிக்ஸ் வடிவில் அவரது நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது?
ஒவ்வொரு வீழ்ச்சிக்குப் பின்னும் வெற்றி - ஃபீனிக்ஸ் வடிவில் ஜெயலலிதா நினைவிடம்
x
மலர்கள் சூழ்ந்த பாதையல்ல, முட்கள் நிறைந்த பாதையில் பயணித்தே, அரசியலில் உயரத்தை எட்டினேன்... மறைந்த முதல்வர் ஜெயலலிதா உதிர்த்த வார்த்தைகள் இவை... 

இன்று ஃபீனிக்ஸ் பறவை வடிவிலான அவரது நினைவிடம், முதல்வர் பழனிசாமியால் திறக்கப்பட்டுள்ளது. சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்த்தெழுவதாக கூறப்படும் ஃபீனிக்ஸ் பறவையின் வடிவத்தில், ஜெயலலிதாவின் நினைவிடம் அமைவதற்கு, அவரது வாழ்க்கையே ஒரு காரணமாக இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள். 

குழந்தைப் பருவத்தில், கல்வியின் மீது தீரா ஆசை இருந்தும், தாயாரின் கட்டாயத்தால் சினிமாவில் நுழைந்தார் ஜெயலலிதா. பின் உச்சநட்சத்திரமாக திரை வானில் மின்னிய அவருக்கு, வழக்கறிஞர் ஆகும் ஆர்வம் இருந்திருக்கிறது. 

எனினும், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் எண்ணத்தால், அரசியலில் பிரவேசித்தார். அவரை கொள்கை பரப்பு செயலாளராக அறிவித்தார் எம்.ஜி.ஆர். எனினும் அவரது இறுதி ஊர்வலத்தில், முழுமையாக பங்கேற்க கூட வாய்ப்பு வழங்காமல் ஒதுக்கப்பட்டார் ஜெயலலிதா. 

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் அதிமுக இரண்டானது. கட்சியின் மூத்த தலைவர்கள் ஓரணியில் வரிசை கட்ட, அவர்களை எதிர்த்து தனியாக சேவல் சின்னத்தில் களம்கண்டு, 27 எம்.எல்.ஏ.க்களை பெற்று, தன் வலிமையை நிரூபித்தார் ஜெயலலிதா. 1987ல் தொடங்கிய அரசியல் போராட்டம், 1991 தேர்தலில் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்தது. 

வீழ்ச்சியால் துவண்டு விடாமல், மீண்டெழுந்து அறுதி பெரும்பான்மையுடன் முதல்வரானார் ஜெயலலிதா. ஆனால், 1996 பொதுத்தேர்தலில், வரலாறு காணாத தோல்வியை சந்தித்ததோடு, வழக்குகள், சிறைவாசம் என ஜெயலலிதாவை பின்னிழுத்தன.    

அரசியலை விட்டே ஒதுங்கிவிடுவார் என்றெல்லாம் பேசப்பட்ட நிலையில்தான், 1998ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 18 எம்.பி.க்களை பெற்றதோடு, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அமைச்சரவையில் அதிமுகவையும் இடம்பெற வைத்தார்

பின் 2001 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று, முதல்வரான ஜெயலலிதா, நான்கே மாதத்தில் டான்சி வழக்கின் தீர்ப்பால் பதவி இழந்தார். அந்த வழக்கில் வெற்றிபெற்று, ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல் வெற்றி மூலம் மீண்டும் முதல்வரானார். 

2006 சட்டமன்றத் தேர்தலில் தோல்வி முகம், நீதிமன்ற வழக்குகள் என ஐந்தாண்டுகள் கழிய, 2011 தேர்தல் வெற்றி மீண்டும் ஜெயலலிதாவை முதல்வராக்கியது. 

2014ம் ஆண்டு செப்டம்பர் 27ல் சொத்து வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, 28 நாட்கள் சிறைவாசம் தந்தது. சிறையில் அவர் கழித்த நாட்களே, அவரது உடல்நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.  

சொத்து வழக்கில் கிடைத்த வெற்றிக்குப் பின், 2016 சட்டமன்ற தேர்தல் வெற்றியால், எம்.ஜி.ஆரை போலவே, இரண்டாவது முறையாக ஆட்சியை தொடரும் பெருமையை பெற்றார், ஜெயலலிதா. அடுத்த ஆறே மாதத்தில், உடல்நலம் குன்றி, 75 நாட்கள் மருத்துவ சிகிச்சை பெற்று, சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் 5ம் தேதி மறைந்தார். 
 
அரசியல், பொதுவாழ்வு என அரை நூற்றாண்டில், ஒவ்வொரு வீழ்ச்சிக்குப் பின்னும், மேலெழுந்து தன்னை நிரூபித்தவர் ஜெயலலிதா. அவரது நினைவிடத்தை ஃபீனிக்ஸ் பறவையின் வடிவத்தில் எழுப்புவதே சரி என முடிவுசெய்து, கட்டமைத்திருக்கிறது தமிழக அரசு. 

அரசியல் வாழ்வின் வீழ்ச்சிக்கும், எழுச்சிக்கும் மவுன சாட்சியாக இருக்கப் போகிறது, ஃபீனிக்ஸ் பறவை வடிவிலான ஜெயலலிதா நினைவிடம்...

Next Story

மேலும் செய்திகள்