சூரப்பா மீது 280 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு - புகார் கொடுத்தவர்களுக்கு அடுத்த வாரம் நோட்டீஸ்
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய புகார்தாரர்களுக்கு அடுத்த வாரம் நோட்டீஸ் அனுப்பி தனித்தனியே விசாரணை நடத்தப்படும் என்று விசாரணை அதிகாரி கலையரசன் தெரிவித்து உள்ளார்.
சூரப்பா மீது 280 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. மேலும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகார்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கான அலுவலகம் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள பொதிகை வளாகத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த விசாரணை குழுவில் உயர்கல்வித்துறை துணை செயலாளர் சங்கீதா உள்ளிட்ட பலர் இடம் பெற்று உள்ளனர். விசாரணையின் தற்போதைய நிலை குறித்து பேசிய கலையரசன், துணைவேந்தர் மீது புகார் கொடுத்துள்ள நபர்களுக்கு அடுத்த வாரம் நோட்டீஸ் அனுப்பி, தனித்தனியே விசாரணை நடத்தப்படும் என்றும், அதன் அடிப்படையிலான தகவல்களை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்து உள்ளார். மேலும், நாளை முதல் அலுவலகத்தில் இவ்விவகாரம் தொடர்பாக புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்து உள்ளார்.
Next Story