மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன் - 6 வயது சிறுமியின் வாக்குமூலத்தால் சிக்கிய தந்தை
மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன், 6- வயது சிறுமியின் பரபரப்பு வாக்குமூலத்தால் போலீசாரிடம் சிக்கிய சம்பவம், செங்கல்பட்டில் நிகழ்ந்துள்ளது.
சென்னையை அடுத்த செங்கல்பட்டைச் சேர்ந்த ஜெகநாதனுக்கும், அச்சிறுப்பாக்கத்தைச் சேர்ந்தஹேமாவதிக்கும் 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகனும் மகளும் உள்ள நிலையில், ஹேமாவதி இறந்து விட்டதாக, அவரது பெற்றொருக்கு ஜெகநாதன் தகவல் கொடுத்துள்ளார். பதறி துடித்து வந்த பெற்றோர் ஹேமாவதி உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதனிடையே, மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஹேமாவதியின் பெற்றோர் செங்கல்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு, ஜெகந்நாதனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அந்த பெண்ணை 2-வது திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்து வருவதாகவும் தெரிவித்தனர். அதற்காகவே, தங்களது மகள் ஹேமாவதியை அடித்து கொன்று விட்டு, தூக்கில் தொங்க விட்டு, நாடகமாடுவதாகவும் குற்றம் சாட்டினர். இதையடுத்து, செங்கல்பட்டு நகர காவல் நிலைய போலீசார், ஹேமாவதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், ஹேமாவதியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், ஹேமாவதியின் 6 வயது மகளிடம் போலீசார் விசாரித்த போது உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜெகந்நாதன் வியாழக்கிழமையன்று, வழக்கம் போல பணி முடிந்து குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஜெகந்நாதன் ஹேமாவதியை அடித்து தூக்கில் மாட்டியுள்ளார். மேலும், யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, மனைவியை தூக்கு கயிற்றில் இருந்து கீழே இறக்கி, புது உடைகளை மாற்றி, தன் பக்கத்தில் படுக்க வைத்துள்ளார். அதிகாலையில் மனைவி தூக்கத்திலேயே இறந்து விட்டதாக ஜெகந்நாதன் நாடகமாடியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, 6 வயது சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார் ஜெகந்நாதனை கைது செய்தனர். மனைவியை கணவனே அடித்துக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story