தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ் - ஆக்சிஜன் சிலிண்டர் மாற்றிய போது விபத்து
தென்காசி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளியை ஏற்ற வந்த ஆம்புலன்ஸ் வாகனம், திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் ஒருவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை நெல்லை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று வரவழைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் ஓட்டுனர் இசக்கிராஜன், வாகனத்தில் இருந்த சிலிண்டர் காலியானதால் வேறு சிலிண்டரை பொருத்திக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென சிலிண்டரில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே, இசக்கி ராஜன் கீழே இறங்கிய நிலையில், சிலிண்டர் வெடித்து ஆம்புலன்ஸில் தீ பரவியது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஆம்புலன்சில் பரவிய தீயை அணைத்தனர். இதனிடையே சிலிண்டர் வெடித்த சத்தம் கேட்டு, கொரோனா நோயாளிகள் திரண்டதால் பரபரப்பு நிலவியது. பின்னர், மூச்சுத் திணறல் ஏற்பட்ட நோயாளி, மற்றொரு ஆம்புலன்ஸ் வாகனத்தில் நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Next Story