15 வயது சிறுமியை சீரழித்த 3 இளைஞர்கள் - போக்சோ சட்டத்தில் சிறையில் அடைப்பு
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஃபேஸ்புக் பழக்கத்தால் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உலக அளவில் மனித மனங்களை ஒன்றிணைக்க சமூக வலைதளங்கள், பெருமளவு உதவுகின்றது. உலகில் ஒரு மூலையில் இருக்கும் நபர் மற்றொரு திசையில் உள்ளவரிடம் மிக எளிதாக தொடர்பு ஏற்படுத்தி கொள்ள உதவுகிறது.
இதனால் சாதகங்கள் இருந்தாலும் ஒரு சிலர் பயன்படுத்தும் விதத்தில் பலருக்கு பெருமளவு பாதகங்களே ஏற்படுகிறது.
பேஸ்புக் எனும் இந்த சமூக வலைதளத்தால் பலரது வாழ்க்கை சீரழிந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 15 வயது சிறுமியின் வாழ்வையும் இது புரட்டி போட தவறவில்லை.
கம்பன் நகர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் வந்தவாசி அடுத்த இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த இலியாஸ் என்பவருக்கும் ஃபேஸ்புக் மூலமாக நட்பு ஏற்பட்டது.
பேஸ்புக், மெசஞ்சர் மூலம், கடந்த சில மாதங்களாக உரையாடலை துவக்கிய இலியாஸ் காதல் எனும் வார்த்தையின் மூலம் மெல்ல மெல்ல சிறுமியின் மனதை மாற்றியுள்ளான்.
கடந்த 24 ஆம் தேதி சந்திக்க வேண்டும் என கூறி குறுஞ்செய்தி அனுப்பிய இலியாஸ் அந்த 15 வயது சிறுமியை தந்திரமாக பேசி வந்தவாசி புறவழி சாலையில் உள்ள சவுக்குத் தோப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு சென்றதும் தமது நண்பர் பர்கத், சூர்யா ஆகியோரை இலியாஸ் வரவழைத்தார். இதை அடுத்து மூன்று பேரும் ஒன்று சேர்ந்து கூட்டாக 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து சிறுமியை சவுக்குத் தோப்பில் விட்டுவிட்டுச் சென்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அலங்கோலத்துடன் அழுது கொண்டு வெளியே வந்து பெற்றோரிடம் கூற அவர்கள் வந்தவாசி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய, திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வனிதா மற்றும் போலீசார் சம்பவ இடமான சவுக்கு தோப்புக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இலியாஸ் பர்கத் சூர்யா ஆகிய மூன்று பேர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பேஸ்புக் நட்பு, விபரீதத்தில் முடிந்த நிலையில் இந்த சம்பவம், வந்தவாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசை வார்த்தை பேசி, பணம் பறிப்பது, பாலியல் தொந்தரவு அளிப்பது என, ஆபத்துகள் நிறைந்த சமூக வலைதளங்களை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும் என்பதே, சமூக ஆர்வலர்களின், வேண்டுகோளாக உள்ளது.
Next Story