சபாநாயகர் அதிகாரம் தொடர்பான வழக்கு - சபாநாயகர் அதிகாரத்தில் தலையிட வரம்பு தான் என்ன?
தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என ஒரு நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், ராஜஸ்தானில் 19 எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ய கூடாது என ஒரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ஆதரவை விலக்கிக் கொள்வதாக வெற்றிவேல், தங்கத் தமிழ் செல்வன் உள்ளிட்ட 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர்.
இந்த செயல் கட்சித் தாவல் நடவடிக்கை என தெரிவித்து, செப்டம்பர் மாதம் 18 எம்.எல்.ஏ-க்களையும் தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த அப்போதைய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது.
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தனது தீர்ப்பில், 10 - வது அட்டவணைப்படி தகுதி நீக்க மனு மீது முடிவெடுக்கும் ஒரே அதிகாரம் சபாநாயகருக்கு மட்டுமே உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்
18 எம்.எல்.ஏ-க்களுக்கும் போதுமான வாய்ப்பு கொடுத்து தான், சபாநாயகர் தகுதி நீக்க உத்தரவிட்டுள்ளார் என்றும் சபாநாயகர் உள்நோக்கத்துடன் உத்தரவு பிறப்பித்தார் என்பதை 18 பேரும் நிரூபிக்கவில்லை என்றும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சுட்டிக்காட்டி இருந்தார்.
இந்த வழக்கில் நீதிபதி சுந்தர் அளித்த தீர்ப்பில், பத்தாவது அட்டவணையின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தை, அரசியல் காரணங்களுக்காக சபாநாயகர் பயன்படுத்தி உள்ளார் என்ற 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பு வாதத்தில் வலு உள்ளதாகவும் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டி இருந்தார்.
இந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மூன்றாவது நீதிபதியாக வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன், சபாநாயகர் 18 பேரை தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவில் எந்த தவறும் இல்லை என்று கூறி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அளித்த தீர்ப்பை உறுதி செய்தார்.
இதனைத் தொடர்ந்து, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் உறுதி செய்யப்பட்டது.
தமிழகம் போன்றே ராஜஸ்தானிலும் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறது.
ராஜஸ்தான் முதலமைச்சருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க அம்மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சபாநாயகர் நடவடிக்கை எடுக்கும் முன்பே நீதிமன்றம் தலையிட்டு, அவரது அதிகாரத்தை பயன்படுத்த விடாமல் தடுப்பு அமைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனிடையே, உயர்நீதிமன்ற உத்தரவு, உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என கூறி வழக்கு ஒத்திவைத்துள்ளது.
தற்போது சச்சின் பைலட் ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசும் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டு உள்ள நிலையில், பத்தாவது அட்டவணையில் அதிரடி மாற்றங்களை செய்து தீர்ப்பு வழங்கப்படும் நிலை உருவாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Next Story