2 குழந்தைகளை கழுத்தை நெறித்து கொன்ற தந்தை - எய்ட்ஸ் பயத்தால் கொலை செய்ததாக தகவல்
தவறான உறவால் எய்ட்ஸ் நோய் இருக்குமோ என்ற அச்சத்தில் தன் பிள்ளைகளை பெற்ற தந்தையே கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காளிராஜ். இவர் திருத்தங்கலில் அரசு கால்நடை மருத்துவமனையில் கால்நடை ஆய்வாளர் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி தங்க புஷ்பம். பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 2013ல் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 5 மற்றும் 3 வயதில் 2 பிள்ளைகள். ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை என மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது இவர்களின் வாழ்க்கை. இதனிடையே கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக காளிராஜூக்கு ஒரு பெண்ணுடன் தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் நெருங்கிப் பழகியதால் தனக்கு எய்ட்ஸ் நோய் இருக்குமோ என அச்சத்தில் இருந்துள்ளார் காளிராஜ். இதையடுத்து தன் மனைவி, பிள்ளைகளுடன் சென்று மருத்துவமனையில் சோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவில் எய்ட்ஸ் இல்லை என வந்தாலும் கூட, காளிராஜ் நிம்மதி அடையவில்லை.
செல்போனில் பல தகவல்களை தேடி தேடி ஆராய்ந்து தனக்கு நோய் இருப்பதாக தானே நினைத்துக் கொண்டு மன உளைச்சலில் தவித்து வந்தார் காளிராஜ். இதன் காரணமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
ஊரடங்கால் வேலைக்கு போகாமலும் இருந்ததால் மன உளைச்சலில் இருந்த காளிராஜ், தன் பிள்ளைகள் 2 பேரையும் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். வேலைக்கு சென்று விட்டு திரும்பிய தங்க புஷ்பம், தன் பிள்ளைகள் உயிரிழந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மனைவியை பார்த்த உடனே கடப்பாறையை எடுத்துக் கொண்டு வெறி பிடித்தவர் போல ஓடி வந்துள்ளார் காளிராஜ்.
தனக்கு எய்ட்ஸ் இருப்பதால் நோய் வந்து சாவதற்கு முன்பாக இப்போது சேர்ந்து சாகலாம் வா என கூறியபடி அவர் ஓடிவந்ததை பார்த்து தங்க புஷ்பம் அலறியுள்ளார். இதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் ஓடி வரவும் காளிராஜ் தப்பி ஓடினார்.
பின்னர் குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டது. தப்பி ஓடிய காளிராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். போலீசாரிடமும் தனக்கு எய்ட்ஸ் இருப்பதாக கூறிக் கொண்டே இருந்துள்ளார் காளிராஜ். நோய் இல்லை என முடிவுகள் வந்தாலும் கூட, தேவையற்ற மன குழப்பத்தால் 2 பிஞ்சுகளின் உயிர் பறிபோனது பரிதாபத்தின் உச்சம்....
Next Story