ஆன்லைனில் சீட்டு விளையாடியதால் கடன் - விரக்தியில் மாயமான காவலர் மீண்டும் வந்தார்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆன்லைனில் சீட்டு விளையாடி கடன் ஏற்பட்டதால் மாயமான காவலர் ஒருவர் ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் காவல் நிலையத்தில் ஆஜரானார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மொட்டமலை பகுதியில் 11-வது பட்டாலியன் படைப்பிரிவில் காவலராக வேலை பார்த்து வருபவர் சேரன் பாண்டியன். ஆன்லைனில் சீட்டு விளையாண்டு வந்த இவருக்கு கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மனைவியின் நகைகளை வைத்து கடனை அடைத்துள்ளார். மேலும் மன உளைச்சலில் இருந்த சேரன் பாண்டியன், கடந்த 20ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை கண்டுபிடித்து தருமாறு புகார் அளிக்கப்பட்டது. இந்த சூழலில் ஒரு வாரத்திற்கு பிறகு அவர் நத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு நேரில் வந்தார். ஆன்லைன் சீட்டு ஆடியதால் ஏற்பட்ட கடனால் மனவிரக்தியில் இருந்ததால் இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
Next Story