"ஆர்.எஸ். பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய ஆர்வம் ஏன்?"- காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய காவல்துறை அதிக ஆர்வம் காட்டுவது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கருத்தரங்கு ஒன்றில், பட்டியல் இனத்தவர்கள் குறித்து கருத்து தெரிவித்ததாக கூறி, திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதிக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டதை அடுத்து, கடந்த மாதம் ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கி சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி மத்திய குற்றப் பிரிவு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடும் நிபந்தனை விதிக்காமல் ஆர்எஸ் பாரதிக்கு ஜாமீன் வழங்கி உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று தடுப்புக்காக , வீட்டில் ஆர் எஸ் பாரதி தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததாக கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை விசாரித்த நீதிபதிகள், மாநில அரசு கவனிக்க வேண்டிய ஏராளமான விஷயங்கள் உள்ள நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய அதிக அக்கறை காட்டுவது ஏன் என கேள்வி எழுப்பினர். பின்னர் விசாரணையை ஜூன்19 ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
Next Story