தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை செலவை அரசே ஏற்குமா? - உயர்நீதிமன்றம் கேள்வி
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ,மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பேரிடர் காலத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை செலவை சம்பந்தப்பட்ட மாநில அரசே ஏற்க வேண்டும் எனவும், ஆனால், தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை கட்டணம் நிர்ணயித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை செலவை அரசே ஏற்பது குறித்தும், அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் அளிக்க ஏதேனும் வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கில் மத்திய அரசையும் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராகச் சேர்த்த நீதிபதிகள், கொரோனா தொற்று சிகிச்சைக்கு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் குறித்தும், தனியார் மருத்துவமனை சிகிச்சை கட்டணம் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்
Next Story