ஓ.பி.எஸ். உள்ளிட்ட ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் 11 பேர் தகுதி நீக்குக - உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் புதிய மனு
ஓ.பி.எஸ். உள்ளிட்ட ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் 11 பேரை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றமே முடிவெடுக்க வேண்டுமென திமுக சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தலைவர் உரிய நேரத்தில் இதுதொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என கூறி மனுவை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்திருந்த நிலையில் திமுக சார்பில் தற்பொழுது புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் சட்டப்பேரவைத் தலைவர் எந்தவிதமான பணியும் இது தொடர்பாக எடுக்காமல் உள்ளதை சுட்டிக்காட்டி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக இதுவரை சபாநாயகர் நடவடிக்கை எடுக்காததால், ஓ.பி.எஸ், கே.பாண்டியராஜன் உள்ளிட்டோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மார்ச் 18ம் தேதி, மணிப்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் வெற்றிபெற்று பின்னர் கட்சி மாறி வனத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஷியாம் குமாரை தகுதி நீக்கம் செய்யக்கோரும் விவகாரத்தில் சட்டப்பேரவைத் தலைவர் முடிவெடுக்க தொடர்ச்சியாக காலம் தாழ்த்தியதால், ஷியாம்குமார் மணிப்பூர் சட்டப்பேரவைக்குள் நுழைவதற்கு உச்சநீதிமன்றம் தன் தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி தடைவிதித்ததோடு, அவர் அமைச்சராக தொடரவும் தடைவிதித்தும் உத்தரவிட்டதை தி.மு.க. தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
Next Story