தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் தீவிர முயற்சியால், நாட்டிலேயே குணமடைவோர் சதவீதம் தமிழகத்தில் தான் அதிகம் என்றும், இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகிலேயே தமிழகத்தில் தான் உயிரிழப்பு சதவீதம் குறைவு என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் தான் அதிக பரிசோதனை மையங்கள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், நாள் ஒன்றுக்கு சராசரியாக 13 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 3 ஆயிரத்து 384 வென்டிலேட்டர்கள் தயாராக உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரசின் வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுவது அவசியம் என வேண்டுகோள் விடுத்துள்ள முதலமைச்சர்,
தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார். தினமும் 8 லட்சம் மக்களுக்கு சூடான, சுவையான இலவச உணவு வழங்கப்படுவதாக தெரிவித்த முதலமைச்சர், மனதிலும், எண்ணத்திலும் துணிவு கொண்ட பழம்பெரும் சந்ததி தமிழ் சமுதாயம் என பெருமிதம் தெரிவித்துள்ளார். சீனாவில் கொரோனா கண்டறியப்பட்டவுடன் தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்றும், சமூக பரவல் உருவாகி விடக்கூடாது என்பதற்காகவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்றும் முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
வீட்டிலேயே முடங்கி இருப்பது எளிதான காரியம் அல்ல என்று கூறியுள்ள முதலமைச்சர், தனிமனித உறுதியும், ஒழுக்கமுமே நம்மை கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் என்று தெரிவித்துள்ளார். 5 லடசத்து 50 ஆயிரம் பரிசோதனை மூலமே 86 சதவீதம் தொற்று உடையவர்களுக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என்பது தெரிந்ததாக குறிப்பிட்ட முதலமைச்சர், உயிருக்கும், வாழ்வாதாரத்துக்கும் அரசு சமமான முன்னுரிமை அளித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
ஜூன் 3 வரை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 378 கோடியே 96 லட்சம் ரூபாய் வந்துள்ளதாக தெரிவித்த முதலமைச்சர்,
நிதி அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஒப்பந்த அடிப்படையில் 530 மருத்துவர்கள், 2 ஆயிரத்து 323 செவிலியர்கள், ஆயிரத்து 500 ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் நியமனம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், 2 ஆயிரத்து 715 பன்நோக்கு சுகாதார பணியாளர்கள், 334 சுகாதார ஆய்வாளர்களும் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் 292 மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை அளிக்க ஏதுவாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்றும், இதுவரை 14 லட்சத்துக்கும் அதிகமாக பரிசோதனை உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 2 கோடியே 83 லட்சம் முக கவசம், 37 லட்சம் N95 முக கவசம், 25 லட்சம் முழு உடல் கவசம் கொள்முதல் செய்யப்பட்டு, வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
Next Story