ஜெயலலிதா வாரிசு யார் - நீதிமன்றம் அதிரடி
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள் யார் என நீதிமன்றம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள் யார் என நீதிமன்றம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், வேதா நிலையம் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுபற்றிய செய்தித் தொகுப்பை பார்ப்போம்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தாய் நடிகை சந்தியா- தந்தை ஜெயராமனுக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவர் ஜெயலலிதா மற்றொருவர் அவரது சகோதரர் ஜெயக்குமார். ஜெயக்குமாருக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவர் தீபக் மற்றவர் தீபா.
கடந்த 1967 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாயில் 24 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்தை சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வாங்கிய ஜெயலலிதா, அங்கு இரண்டு தளங்களை கொண்ட பங்களாவை ஜெயலலிதா கட்டி வசித்து வந்தார். தற்போது இந்த வேதா நிலையத்தின் சொத்து மதிப்பு 100 கோடி ரூபாய் என வழக்கில் இடம்பெற்றுள்ளது. ஜெயலலிதா அரசியலில் கோலோச்ச தொடங்கிய காலத்தில், தீபக், தீபா அவ்வளவு நெருக்கத்தில் இல்லை.
இந்நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து, அவரது வாரிசு யார் என கேள்வி எழுந்தது. ஜெயலலிதாவின் வாரிசுகள் தாங்கள் தான் எனக் கூறி, அவரது அண்ணன் பிள்ளைகள் தீபா மற்றும் தீபக் ஆகியோர், ஜெயலலிதாவின் சொத்து மற்றும் வேதா நிலையத்துக்கு சொந்தம் கொண்டாடினார்கள். அதேநேரத்தில் மறுபுறம் அந்த இல்லத்தை ஜெயலலிதா நினைவில்லமாக மாற்ற அ.தி.மு.க. அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக கடந்த 22 ஆம் தேதி வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றும் அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனை எதிர்த்து நீதிமன்றத்தை தீபாவும், தீபக்கும் அணுகிய நிலையில், அவர்கள் இருவரும் தான் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசு என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை ஏன், முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றக் கூடாது எனவும், அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு தீபா, தீபக் ஆகிய இருவரும் தான் வாரிசுகள் என அறிவித்தது மூலம், ஒரு கேள்விக்கு பதிலை அளித்துள்ளது.
Next Story