கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முயன்றவர் பலி
சென்னையில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முயன்றவர் சோடியம் நைட்ரேட் கரைசலை குடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தியாகராய நகரில் வசித்து வந்தவர் பெருங்குடி சிவனேசன். இவர் கடந்த 27 வருடங்களாக பயோ டெக் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். மேலும் சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு மருந்து கண்டுபிடிப்பிலும் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளார். சோடியம் நைட்ரேட் மூலம் நைட்ரிக் ஆக்சைடு தயாரித்தால் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் என நினைத்த அவர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். அப்போது பரிசோதனைக்காக சோடியம் நைட்ரேட் கரைசலையும் சிவனேசன் குடித்தார். குடித்த சிறிது நேரத்திலேயே மயக்கமடைந்த அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story