மதுரையை கலங்கடித்த பேக்கிங் டேப் கொள்ளை கும்பலை 2 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது

மதுரையை கலங்கடிக்கும் பேக்கிங் டேப் கொள்ளை கும்பலை 2 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரையை கலங்கடித்த பேக்கிங் டேப் கொள்ளை கும்பலை 2 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது
x
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் விவசாயிகள் வளர்க்கும் ஆடுகள் காணாமல் போவதாக அடிக்கடி புகார் வந்தது. ஆரம்பத்தில் வந்த சின்ன சின்ன புகார்கள் எல்லாம் விஸ்வரூபம் எடுக்கவே போலீசார் உஷாராகினர். இந்த சூழலில் தான் ரோந்து பணியின் போது ஆட்டோவை சோதனை செய்த போலீசார் அதில் ஆடுகள் இருப்பதை கண்டறிந்தனர். ஆனால் சந்தேகத்தை அதிரிக்கும் விதமாக ஆடுகளின் வாயில் பேக்கிங் டேப் சுற்றப்பட்டு இருப்பதால் அவர்களின் சந்தேகம் வலுத்தது. 

அப்போது தான் ஆடுகளை திருடும் கும்பல் இது என்றும் கடத்திச் சென்றவர் ராக்கெட் ஜெயபால் என்றும் தெரியவந்தது. போலீசாருக்கு பொறி தட்டவே இதுபோல் பேக்கிங் டேப் சுற்றி 2 ஆண்டுகளுக்கு முன் கொலையான சம்பவமும் நினைவுக்கு வந்தது. நாகமலை புதுக்கோட்டையில்  உள்ள தனியார் பஸ் பாடி பில்டிங் கம்பெனியில் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி காவலாளி நித்யானந்தம் என்பவர் கொலை செய்யப்பட்டார். இவரை கொலை செய்த கும்பல் அவரின் முகம் மற்றும் கை கால்களில் பேக்கிங் டேப்களை சுற்றி கொன்று வீசியது. 

இதேபோல் ஆடுகள் கத்தாமல் இருப்பதற்காக அதன் வாயில் பேக்கிங் டேப் சுற்றி கடத்தலில் ஈடுபட்டிருக்கிறது கொள்ளை கும்பல். இந்த இரண்டு சம்பவங்களின் பின்னணியும் ஒரே மாதிரி இருப்பதால் கடத்தல் கும்பலை சுற்றி வளைத்த போலீசார், அவர்கள் கொலையாளிகள் என்பதையும் கண்டறிந்தனர். 

2 ஆண்டுகளுக்கு முன் ஆடுகளை திருடிச் சென்ற அந்த கும்பல், அதனை மறைத்து வைக்குமாறு காவலாளி நித்யானந்தத்திடம் தெரிவித்துள்ளது. அவர் அதற்கு மறுக்கவே வாய், கை, கால்களில் பேக்கிங் டேப் ஒட்டி கழுத்தை அறுத்து கொன்றதாகவும்  தெரிவித்துள்ளனர். ராக்கெட் ஜெயபால் தலைமையில் அப்பள பாண்டியன் என்பவரும் கூட்டு சேர்ந்து கொலை, கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி வந்தது தெரியவந்தது. 

ராக்கெட் ஜெயபால், அப்பள பாண்டியனை கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆடுகளையும் மீட்டதோடு, கொலைக்கு பயன்படுத்திய பேக்கிங் டேப்களையும் பறிமுதல் செய்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு கொலையாளிகள் கைது செய்யப்பட்டாலும் பேக்கிங் டேப்  கொள்ளை கும்பலால் தூங்கா நகரம் அதிர்ந்து போயிருக்கிறது

Next Story

மேலும் செய்திகள்