வங்கி கொள்ளை வழக்கு: ராஜஸ்தானில் மேலும் ஒருவர் கைது - 85 பவுன் நகை, ரு.11 லட்சம் பறிமுதல்
திருப்பூரில் பாரத ஸ்டேட் வங்கியில் நகை மற்றும் பணம் கொள்ளை போன வழக்கில் ராஜஸ்தானில் மேலும் ஒரு கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கள்ளிபாளையத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் கடந்த 23ம் தேதி, 242 பவுன் நகை மற்றும் 19 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போனது. இந்நிலையில் அரியானா வங்கி கொள்ளை தொடர்பாக, அணில் சிங் என்பவரை டெல்லி விமான நிலையத்தில் போலீசார் கைது செய்த போது, அவர் திருப்பூர் வங்கி கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், நகைகளை அனந்தபூரில் உள்ள ராமகிருஷ்ணன் ஆச்சாரி மற்றும் ராமன் ஜி அப்பா ஆகியோரிடம் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதற்கிடையே, நகையை விற்பதற்காக, அவர்கள் இருவரும் சேலம் வந்ததை அறிந்த தனிப்படையினர் அவர்களை கைது செய்து 85 பவுன் நகைகளை மீட்டனர். மேலும் வங்கி கொள்ளையில் ராஜஸ்தானை சேர்ந்த இசார்கானையும் அங்கு சென்று போலீசார் கைது செய்ததோடு, 11 லட்சத்து 12 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
Next Story