உறுப்புகளை விற்க நிர்பந்தப்படுத்துவதாக புகார் - தனியார் மருத்துவமனை மீது குற்றச்சாட்டு
மதுரையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை செலவுக்காக உடல் உறுப்புகளை விற்க சொல்லி நிர்பந்தப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை திருப்பாலை பகுதியை சேர்ந்தவர் வீரபாண்டி. டீக்கடை நடத்தி வந்த இவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதனால் பதறிப்போன இவரது குடும்பத்தினர், அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர். அப்போது முதல் கட்டமாக 5 லட்ச ரூபாய் பணம் கட்டுமாறு கூறியதால் அதை அவர்கள் செலுத்தியுள்ளனர்.
தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக கூறிய மருத்துவமனை நிர்வாகம், மருந்து, மாத்திரைகள், சிகிச்சை என கூறி பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 7ஆம் தேதி வீரபாண்டி மூளைச்சாவு அடைந்து விட்டதாக கூறியதாகவும், மருத்துவமனைக்கு செலுத்த வேண்டிய தொகையை கட்டுமாறு தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.
கடந்த அக்டோர் மாதம் முதல் தற்போது வரை ஒரு கோடி ரூபாய் வரை செலவானதாக மருத்துவமனை காட்டிய பில்லை பார்த்து அதிர்ந்து போனது வீரபாண்டியின் குடும்பம். பணத்தை செலுத்த இயலாத குடும்ப சூழல் என கூறியதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மருத்துவமனை நிர்வாகம், உடல் உறுப்புகளை விற்க சொல்லி நிர்பந்தப்படுத்துவதாக குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார் வீரபாண்டியின் மனைவி நித்யா..
இதுதொடர்பாக மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளித்த நித்யா, மருத்துவமனையின் நிர்வாகத்தால் தங்கள் வாழ்க்கை பறிபோய் விட்டதாகவும் கண்ணீர் மல்க கூறுகிறார். மயக்கம் என வந்தவரை 6 மாத சிகிச்சைக்கு பிறகு மூளைச்சாவு அடைந்துவிட்டதாக கூறியதில் இருந்து மீளமுடியாத குடும்பம், இப்போது மீளாத்துயரில் இருக்கிறது.
Next Story