போலீசாரின் அத்துமீறலுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு கோரி வழக்கு: உள்துறை செயலாளர், டிஜிபி, கமிஷனர் பதிலளிக்க உத்தரவு
வீடு புகுந்து தாலி செயின், சொகுசு கார் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்ற போலீசாரின் அத்துமீறலுக்கு இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கில் உள்துறை செயலாளர் டிஜிபி கமிஷனர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை முகப்பேரில் வசித்து வந்த கனகசபை என்பவர் தன் வீட்டை விற்க முயன்றுள்ளார். வீட்டை வாங்க விருப்பம் தெரிவித்த சரவணன் என்பவர் முன் பணமாக 7 லட்ச ரூபாயை கொடுத்த நிலையில், 2019ம் ஆண்டில் திருப்பூரில் உள்ள தன் சகோதரியின் வீட்டுக்கு சென்று தங்கியுள்ளார் கனகசபை.
அங்கு திடீரென மதுரவாயல் உதவி ஆய்வாளர் செல்லத்துரை, காவலர் வினோத் உள்ளிட்ட 5 பேர் சென்று, கனகசபையை தாக்கியதோடு வீட்டில் இருந்த தாலி செயின், தங்க வளையல் என ஆறரை சவரன் நகைகள், வெள்ளி கொலுசு மற்றும் 7 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் சொகுசு கார் ஆகியவற்றை எடுத்துச் சென்றனர்.
பின்னர் கனகசபையையும் அவர்கள் மதுரவாயல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது தான் வீட்டை வாங்க பணம் கொடுத்த சரவணன், தான் வேலை பார்த்த முதலாளியிடம் இருந்து பணத்தை திருடியதாகவும், அந்த பணத்தை கொண்டு வந்து கனகசபையிடம் கொடுத்தாகவும் கூறப்படுகிறது. கூலித்தொழிலாளி ஒருவரிடம் இருந்த பணம் பறித்ததாகவும் சரவணன் மீது புகார் இருந்ததால் பணத்தை வாங்கிய கனகசபையையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் ஜாமீனில் வந்த கனகசபை, தன்னிடம் இருந்து பறிமுதல் செய்த கார், நகைகளை கேட்க மதுரவாயல் காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த எஸ்.ஐ. செல்லத்துரை, கனகசபையை அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. கனகசபையின் காரை தன்னுடைய உறவினர் பயன்படுத்தி வருவதாகவும், முடிந்தால் போய் வாங்கிக் கொள்ளுங்கள் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த கனகசபையை காவல்துறையின் அத்துமீறலால் பாதிக்கப்பட்டதாகவும், தனக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உள்துறை செயலாளர் உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மனுவுக்கு பதில் அளிக்க உள்துறை செயலாளர், டிஜி.பி. மற்றும் போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டார்.
Next Story