இன்று மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் - தலைவராக உயர்ந்த வரலாறு
இன்று பிறந்த நாள் காணும் தி.முக. தலைவர் ஸ்டாலினின் அரசியல் பயணம் பற்றிய செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்..
* திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக தனது தந்தை கருணாநிதி இருந்ததால், 14 வயதிலேயே அந்த கட்சிக்காக பிரசாரம் செய்தார். ஆனால், ஸ்டாலினை முழுமையான அரசியலுக்கு இழுத்து வந்தது, மிசா.
* இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலை பிரகடனத்தால், நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டபோது, கருணாநிதியின் மகன் என்ற ஒரே காரணத்துக்காக ஸ்டாலினும் அதில் தப்பவில்லை.
* பின்னர், அரசியலில் தீவிரமாக களம் புகுந்த ஸ்டாலின், 1976ம் ஆண்டில் திமுக பொதுக்குழு உறுப்பினர்களில் ஒருவரானார். அதன்பிறகு, 1980ல் அவரது முயற்சியில் துவங்கியது தான் திமுக இளைஞர் அணி
* தேர்தல் களத்தில் ஸ்டாலின் அறிமுகமான ஆண்டு 1984. அவரது முதல் தேர்தலின்போது வீசிய, இந்திரா காந்தி படுகொலை மற்றும் மருத்துவமனையில் எம்ஜிஆர் என்ற அனுதாப பேரலை சூழல் காரணமாக, ஸ்டாலினால் கரையேற முடியவில்லை.
* மீண்டும் 1989ம் ஆண்டு, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஸ்டாலின், 1996, 2001, 2006 என 4 முறை அதே தொகுதியை தக்க வைத்தார்.
* இதற்கிடையே, 1996ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு சென்னை நகரின் மேயரானார். மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட முதலாவது சென்னை மேயர் ஸ்டாலின் தான்.
* 2006ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது, தனது 53வது வயதில் முதன் முறையாக அமைச்சர் பதவியை ஏற்றார், ஸ்டாலின். அப்போது அவருக்கு ஒதுக்கப்பட்ட இலாகா, உள்ளாட்சி துறை.
* அப்போது, முதலமைச்சராக இருந்த கருணாநிதியின் வயது மூப்பு காரணமாக, 2009ம் ஆண்டு மே மாதம், துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார், ஸ்டாலின். தமிழகத்தின் முதலாவது துணை முதலமைச்சர் அவரே.
* அதே நேரத்தில், 2003ம் ஆண்டு திமுக துணை பொதுச் செயலாளர், 2008ம் ஆண்டு பொருளாளர் என கட்சிக்குள்ளும் படிப்படியாக உயர்ந்த ஸ்டாலின், 2017ம் ஆண்டில் திமுகவின் செயல் தலைவரானார்.
* கருணாநிதியின் மறைவுக்கு பிறகு, திமுகவின் தலைமை பொறுப்பை ஏற்ற ஸ்டாலின், முக்கால் நூற்றாண்டு வரலாறு கொண்ட அந்த கட்சியின் 3வது தலைவர் என்ற பெருமையுடன்
* 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து, மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளை வென்று நாடாளுமன்றத்தில் 3வது பெரிய கட்சியாக திமுகவை உயர்த்தி காட்டினார்.
Next Story