டிக் டாக்கில் அத்துமீறும் பள்ளி மாணவ - மாணவிகள் : சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காட்சி
பள்ளி மாணவி ஒருவருக்கு மாணவன் செயின் அணிவிப்பதை தாலி கட்டுவது போல காதல் பாடல் ஒலிக்க வைத்து வெளியாகியிருக்கும் வீடியோ பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவி ஒருவருக்கு மாணவன் செயின் அணிவிப்பதை தாலி கட்டுவது போல காதல் பாடல் ஒலிக்க வைத்து வெளியாகியிருக்கும் வீடியோ பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களை அதிர வைத்துக் கொண்டிருக்கும் இந்த வீடியோ காட்சியை ஒரு பெற்றோர் இடத்தில் இருந்தால் அத்தனை எளிதாக கடந்து செல்லவே முடியாது. காரணம் பதின்ம வயதில் இருக்கும் பிள்ளைகளை பார்த்து பார்த்து பராமரிக்கும் பெற்றோருக்கு இதுபோன்ற வீடியோ காட்சிகளை பார்க்கும் போது பயமே மேலோங்கி நிற்கும். 22 விநாடிகள் வரை ஓடும் இந்த வீடியோ நெல்லை மாவட்டத்தில் உள்ள கோயிலின் முன்பு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விளையாட்டாக இதனை செய்யும் மாணவர்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி கொஞ்சமும் யோசிப்பதில்லை. நண்பர்கள் மத்தியில் தன்னை பெரிய ஆளாக காட்டிக் கொள்ள இதுபோன்ற செயல்களில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, பள்ளி சீருடையில் டிக் டாக்கில் உலா வரும் மாணவ, மாணவிகள் அதிகம்.
பள்ளியின் வாசல் முன்பாக நின்று மாணவ, மாணவிகள் டிக் டாக் பதிவு செய்வதையும் பார்க்க முடிகிறது. மாணவர்கள் ஒருபக்கம், மாணவிகள் ஒரு பக்கம் என வீடியோக்கள் பதிவிட்டாலும், இரு பாலினரும் சேர்ந்து இரட்டை அர்த்த பாடல்களுக்கு முக அசைவுகளை வெளிப்படுத்துவது போன்ற காட்சிகள் உலவுவதை பார்க்கவே பகீர் என்றிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் உலவும் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உண்டு என்பதை உணர வேண்டிய தருணமும் இது... எதிர்காலத்தில் பிரச்சினைகளில் இருந்து பிள்ளைகளை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை கையில் எடுப்பது இதுபோன்ற பிரச்சினைகளுக்கு முடிவு கட்டும்.
Next Story