போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி - போலீஸ் தடியடியில் ஒருவர் காயம்
சென்னையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் மீது கல்வீசி தாக்கப்பட்டதால், தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில், சி.ஏ.ஏ.-வுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை கலைந்து செல்ல போலீசார் வலியுறுத்திய நிலையில், யாரும் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இந்த தடியடியில் ஒருவர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, கல்வீச்சில் காயம் அடைந்த மேற்கு இணை ஆணையர் விஜயகுமாரி உள்ளிட்ட காவல் அதிகாரிகள், ஸடான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டதாக 147 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், போலீசாரின் தடியடி மற்றும் கைதை கண்டித்து, சென்னை மட்டுமல்லாது, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய அமைப்புகள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுப்பேட்டையில் இஸ்லாமியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story