கருவேல மரங்கள் சூழ காட்சி தரும் குடவரை கோயில் - பாண்டியர் கால கோயில் பாழடைந்து கிடக்கும் அவலம்
நெல்லை அருகே பாண்டியர் கால குடவரை கோயில் கருவேல மரங்கள் சூழ பாழடைந்து கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது ராமச்சந்திரபுரம். இங்கு எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆண்டிச்சி பாறை என்ற ஒரு குடவரைக்கோயில் ஒன்று உள்ளது.
சிலைகள் செதுக்குவதற்கான முயற்சிகள் தொடங்கிய நிலையில் அது முடிவு பெறாமல் உள்ளதால் பணிகள் பாதியிலேயே நிற்கிறது. இந்த குடவரைக் கோயிலின் உள்ளே விநாயகர் சிலையும், பாறையில் புடைப்புச் சிற்பமாக பெண் தெய்வத்தின் சிலையும் காட்சி தருகிறது. கோயிலின் மேற்பகுதி வேலைப்பாடுகள் பெருமளவில், மகேந்திரவாடி குகைக் கோயிலின் முகப்பினை ஒத்துக் காணப்படுவதாக வரலாற்று ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
ஆனால் இதனை முறையாக கவனிக்காமல் இருப்பதால் கருவேல மரங்கள் சூழ காட்சி தருகிறது. பெருமைக்குரிய இந்த இடத்தை தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பழமையின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல அதனை முதலில் பாதுகாத்து வைப்பது அவசியம். இதனை அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையும் கூட...
Next Story