தைப்பூச தேரோட்டம் திருவிழா கோலாகலம்

தமிழகத்தில் முருகன் கோவில்களில் தைப்பூச தேரோட்டம் திருவிழா கோலாகல கொண்டாட்டம்...
தைப்பூச தேரோட்டம் திருவிழா கோலாகலம்
x
பழனியில் தைப்பூச தேரோட்டம் 



தைப்பூச திருவிழா பழனியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பூசத்தை ஒட்டி, இன்று மாலை, தேரோட்டம் நடைபெற உள்ளது. தேரோட்டத்தில் கலந்து கொள்வதற்காக, காலை முதலே ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்து வருகின்றனர். காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தேரோட்டத்தை முன்னிட்டு, பழனியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசம்


மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தைபூச தினத்தையொட்டி உற்சவர் சுப்ரமணியர் தேவசேனா பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பெரிய ரத வீதியில் உள்ள ஆண்டவர் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனிடையே, உடலில் அலகு குத்தி, காவடிகள் எடுத்து வந்தது, பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தி, மெய்சிலிர்க்க வைத்தது.

திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா கோலாகலம் 




திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காவடி சுமந்தும், அலகு குத்தியும் அரோகரா கோஷமிட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருச்செந்தூர் கடற்கரையே தெரியாத அளவிற்கு, லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். தைப்பூச விழாவை ஒட்டி, கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

திருத்தணி முருகன் கோயில் தைப்பூச திருவிழா



ஆறுபடை வீடுகளில் 5- ஆம் படைவீடான திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா களைகட்டியுள்ளது. அதிகாலையில் மூலவருக்கு பால், பன்னீர், விபூதி, தேன் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.  பின்னர்  தங்கவேல், தங்க கிரீடம், மாணிக்க கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.  மாலையில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

சுவாமிமலையில் தைப்பூச திருவிழா கோலாகலம்



தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். தைப்பூச விழா கடந்த மாதம் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் அதிகாலையில், மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. சுமார் 12 மணி வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும், 2 மணிக்கு காவிரியில் தீர்த்தவாரி வைபவமும்  நடைபெறுகிறது. 

சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா 



ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.  தைப்பூச திருவிழா கடந்த மாதம் 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், அதிகாலையில் வள்ளி -தெய்வானை சமேத ஸ்ரீமுத்துக்குமார சாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தேரோட்டம் நடைபெற்றது.  இதில் திராளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். 

தைப்பூசம் - மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்ப திருவிழா



மதுரையில், பிரசித்தி பெற்ற மீனாட்சியம்மன் கோவில் தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.விழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் சுவாமி அலங்கரிப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி குளத்தை இருமுறை வலம் வந்தனர். முன்னதாக முக்தீஸ்வரர் கோவிலில் எழுந்தருளிய சுவாமிக்கும் , அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






Next Story

மேலும் செய்திகள்