சம்பா அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரம் - நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க கோரிக்கை
காவிரி டெல்டா கடைமடை பகுதியில் சம்பா அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக இறங்கியுள்ளதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அரசு உடனடியாக திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 11 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி நடைபெற்றது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு மேட்டூர் அணை ஐந்துமுறை நிரம்பியதால் சம்பா சாகுபடி நல்ல நிலையில் அதிக விளைச்சல் உடன் உள்ளது. தற்போது டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதியான நாகையில் அறுவடை பணி பல்வேறு இடங்களில் தொடங்கியுள்ளது .
அறுவடை பணி தொடங்கிய நிலையில் இதுவரை தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. எனவே தமிழக அரசு டெல்டா மாவட்டங்களில் ஒரே நேரங்களில் அனைத்து இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என கடைமடை பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தங்களது கோரிக்கை நிறைவேறினால் மட்டுமே கடைமடை விவசாயிகள் உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Next Story