"தேர்வாணையம் மீது நம்பிக்கை வையுங்கள்" - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
குரூப் 2 ஏ தேர்வில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கூறியுள்ளது.
ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய வெளி மாவட்ட விண்ணப்பதாரர்கள் அதிக எண்ணிக்கையில் முதல்100 தரவரிசைக்குள் வந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தியில், ராமநாதபுரம் மாவட்டத்தில், 128 தேர்வு மையங்களில் முப்பத்தி ரெண்டாயிரத்து 879 பேர் தேர்வு எழுதினர். அதில், 497 பேர் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப் பட்டுள்ளனர் என கூறியுள்ள தேர்வாணையம், தேர்வாகிய 57 நபர்களும் ஒரே அறையிலிருந்தோ அல்லது ஒரே தேர்வுக் கூடத்திலிருந்தோ தெரிவு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளது. தெரிவான விண்ணப்பதாரர்கள், ஒட்டுமொத்த தரவரிசையில், முதல்100 இடங்களில் 35 பேரும், முதல் ஆயிரம் இடங்களில் 40 பேரும் உள்ளனர் என குறிப்பிட்டுள்ள தேர்வாணையம், குற்றச்சாட்டு உள்ள தேர்வரின் விடைத்தாள், ஆவணம், தேர்வுடன் தொடர்புடைய பிற ஆவணங்கள் ஆகியவை கவனத்துடன் கூர்ந்தாய்வு செய்யப்படுவதாக கூறியுள்ளது. ஒளிவு மறைவற்ற தேர்வாணையத்தின் செயலுக்கு குந்தகமான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள தேர்வாணையம், தேர்வாணைய நடவடிக்கைகள் மீது நம்பிக்கை வைத்து, தேர்வர்கள் அமைதிகாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.
Next Story