குடியுரிமை சட்ட மசோதா: முதலமைச்சருக்கு ஸ்டாலின் கேள்வி

காங்கிரஸ் தலைமையிலான அரசு கொண்டு வந்த தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள பதிவேட்டுக்கும் இடையே வேறுபாடு இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்துள்ள பதிலில் திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
குடியுரிமை சட்ட மசோதா: முதலமைச்சருக்கு ஸ்டாலின் கேள்வி
x
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் ஆட்சியின் போது குடியிருப்புகளை அடிப்படையாக கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும், அதற்கு எதிர்ப்பு வந்ததும் கை விடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

ஆனால்  மத ரீதியாக பிளவை ஏற்படுத்தவே,  தற்போது தேசிய குடியுரிமை பதிவேடு  உள்நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டுள்ளது  என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

என்பிஆருக்கும் என்ஆர்சிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று பத்திரிகைகள் சிறப்பு கட்டுரை எழுதிய பின்னும் அவற்றிற்கு இடையே சம்பந்தம் இல்லை என்று முதலமைச்சர் பொய் பிரசாரம் செய்வதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

பிரதமர் பேச்சை கேட்க ஜனவரி 16ஆம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று ஆணை பிறப்பித்து விட்டு எதிர்ப்பு வந்தவுடன் கட்டாயமில்லை என்று முதலமைச்சர் கூறியிருப்பதாகவும் அவர் குறை கூறியுள்ளார். 

பள்ளிக்கல்வி இயக்குநரின் ஆணையில் விருப்பப்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வந்தால் போதும் என்ற வரியை முதலமைச்சரால் காட்ட முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

ஈழத் தமிழர் மற்றும் சிறுபான்மையினருக்கு துரோகம் இழைத்து விட்டு கபட நாடகம் ஆடக் கூடாது என்றும் பதவியில் இருக்கிறோம் என்பதால் மக்கள் செல்வாக்கு பெற்று விட்டதாக கற்பனை கோட்டை கட்டக் கூடாது என்றும் ஸ்டாலின் விவரித்துள்ளார். 

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு முதலமைச்சர் வேட்பாளராக தம்மை அறிவித்து மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனால் தான் அவர் சொல்வதை மக்கள் நம்புவார்கள் என்றும் ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 




Next Story

மேலும் செய்திகள்