"ஜனநாயக நாட்டில் போராட்டங்களை தடுக்க முடியாது" - திமுக பேரணிக்கு தடை கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நடத்த உள்ள பேரணியை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தமிழகத்தில் தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் இன்று பேரணி நடத்த இருப்பதாக அறிவித்திருந்தன. இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீ்திமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, அவசர வழக்காக நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், பேரணியில் எத்தனை பேர் பங்கேற்பார்கள் என்கிற கேள்விகளுக்கு பதில் அளிக்காததால் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஜனநாயக நாட்டில் போராட்டம், ஆர்ப்பாட்டத்தை தடுக்க முடியாது என்று குறிப்பிட்டனர். நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் அனுமதி வழங்குவதில் என்ன பிரச்சினை என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, நிபந்தனைகளை மீறி போராட்டம் நடத்தினால் டிரோன் மூலம் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அரசுக்கு உத்தரவிட்டனர்.
Next Story