"சென்னை பேராசிரியை தற்கொலையில் திடீர் திருப்பம் - 5 ஆண்டுகளுக்கு மேல் நீடித்தும் கை கூடாத காதல்"

சென்னை தனியார் கல்லூரியில் முன்னாள் பேராசிரியை தற்கொலை செய்த வழக்கில், அதே கல்லூரியின் பேராசிரியர் கைதாகி இருக்கிறார்.
சென்னை பேராசிரியை தற்கொலையில் திடீர் திருப்பம் - 5 ஆண்டுகளுக்கு மேல் நீடித்தும் கை கூடாத காதல்
x
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் வகுப்பறைக்குள், அதே கல்லுரியின் முன்னாள் பேராசிரியை ஹரிசாந்தி என்பவர், 18ம் தேதியன்று தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். தான் பணி புரிந்த கல்லூரிக்கு வந்து தற்கொலை செய்ய காரணம் என்ன...? என போலீசார் விசாரித்தபோது, அதிர்ச்சிகரமான பல தகவல்கள் கிடைத்தன.  

தற்கொலை செய்த ஹரிசாந்தியும், அதே கல்லூரியின் தெலுங்கு துறை பேராசிரியரான நடராஜனும், சென்னை பல்கலை கழகத்தில் முதுகலை பட்டம் படித்தபோதே, நட்பாகி, காதலில் விழுந்துள்ளனர். படிப்பு முடிந்து, தனியார் கல்லூரியில் ஹரிசாந்தி வேலைக்கு சேர்ந்த பிறகும், ஐந்து ஆண்டுகளாக காதலை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. 

அதே நேரத்தி​ல், திருவல்லிக்கேணி மேன்சன் ஒன்றில் நடராஜன் தங்கி இருந்திருக்கிறார். இதற்கிடையே, அரசு பள்ளி ஆசிரியையாக ஹரிசாந்திக்கு வேலை கிடைக்க, சென்னை பெரம்பூரில் பணியில் சேர்ந்திருக்கிறார். இதனால், பேராசிரியை பணியை ராஜினாமா செய்ய, அந்த பணி இடத்துக்கு நடராஜன் தேர்வானதாக தெரிகிறது.

இதன் பிறகும், இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், நடராஜனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் முடிந்திருக்கிறது. அதிர்ச்சி அடைந்த ஹரிசாந்தி, நடராஜனிடம் கடுமையாக வாக்குவாதம் செய்திருக்கிறார். தன்னையும் திருமணம் செய்து கொள்ளுமாறு நடராஜனிடம் வலியுறுத்த, அது வாக்குவாதமாக முற்றியுள்ளது. 

இறுதியாக, கடந்த 17ம் தேதியன்று... தான் பணிபுரிந்த கல்லூரிக்கே சென்று, நடராஜனுடன் நீண்ட நேரம் பேசியிருக்கிறார், ஹரிசாந்தி. பின்னர், செல்போனிலும் வாக்குவாதம் நீடிக்க... தனது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்திருக்கிறார், நடராஜன்.

18ம் தேதி காலையில் எழுந்து செல்போனை பார்த்தபோது, தற்கொலை செய்யப் போவதாக ஹரிசாந்தி அனுப்பிய எஸ்எம்எஸ் தகவலை கண்டு அதிர்ச்சியடைந்த நடராஜன்... உடனே, காலை ஏழே கால் மணிக்கெல்லாம் கல்லூரிக்கு விரைந்து சென்று பார்த்தபோது, ஹரிசாந்தி தூக்கில் தொங்குவதை கண்டு பதறியுள்ளார். 

இதையடுத்து, தனக்கு ஹரிசாந்தி அனுப்பிய எஸ்எம்எஸ் தகவல்களை டெலிட் செய்ததோடு, கல்லூரி காவலாளியை அழைத்து, தனது அறையை சோதனை செய்யுமாறு சொல்லி இருக்கிறார். 

இப்படியாக, ஹரிசாந்தியின் மரணம் வெளிச்சத்துக்கு வர, சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் ஆய்வு செய்தபோது, நடராஜன் மீது சந்தேகம் எழ... மேற்கண்ட தகவல்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன.  அனைத்து உண்மைகளையும் பேராசிரியர் நடராஜன் ஒப்புக் கொண்டதையடுத்து, ஹரிசாந்தியை தற்கொலைக்கு தூண்டியதாக அவரை கைது செய்துள்ளனர், சென்னை அரும்பாக்கம் போலீசார்.

Next Story

மேலும் செய்திகள்