கார் எரிப்பு வழக்கை விசாரிக்கச் சென்ற போலீஸ் : விவசாயி கொலையை உளறிக் கொட்டிய குற்றவாளி
கொடைக்கானல் அருகே கார் எரிப்பு தொடர்பான வழக்கு விசாரணையின் போது, 4 மாதங்களுக்கு முன் நடந்த கொலை சம்பவம் ஒன்று அம்பலமாகி உள்ளது.
கொடைக்கானல் அருகே கார் எரிப்பு தொடர்பான வழக்கு விசாரணையின் போது, 4 மாதங்களுக்கு முன் நடந்த கொலை சம்பவம் ஒன்று அம்பலமாகி உள்ளது. தேனி மாவட்டம் ஓடைப்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி. கடந்த 5 வருடங்களுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து வந்த இவர், கொடைக்கானல் அருகே உள்ள பேத்துப்பாறை பகுதியில் விவசாய வேலை செய்து வந்துள்ளார். அப்போது கூம்பூர் வயலை சேர்ந்த தாஸ் மனைவி ஜான்சிராணி என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மணிகண்டன் என்பவருக்கும், ஜான்சிராணியின் தங்கை சாந்திக்கும் பழக்கம் இருந்துள்ளது. மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், திருப்பதி இதனை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் மணிகண்டனுக்கும், திருப்பதிக்கும் இடையே விரோதம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்களான பெருமாள்மலை, நாகராஜ், சரத்குமார், விஷ்ணு மற்றும் ஜான்சிராணி, சாந்தி ஆகியோர் சேர்ந்து திருப்பதியை அடித்துக் கொலை செய்துள்ளனர். அவரது உடலை அதிகாலையில் ஒரு வாகனத்தில் ஏற்றிச் சென்று, அடுக்கம் கிராமத்தின் அருகே குருடி பள்ளம் என்ற இடத்தில் வீசி உள்ளனர். அதிர்ச்சியூட்டும் இந்த தகவல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளைப் பாறை பகுதியில் முருகன் என்பவரின் கார் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில், அதுதொடர்பாக விசாரணை நடத்தச் சென்ற போலீசாரிடம், மணிகண்டன் இந்த உண்மையை உளறிக் கொட்டி உள்ளார். இதன் அடிப்படையில் மணிகண்டன், சரத்குமார், நாகராஜ், ஜான்சிராணி, சாந்தி ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், கொலைக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய விஷ்ணுவை தேடி வருகின்றனர். இதனிடையே திருப்பதியின் உடல் வீசப்பட்ட இடம் ஓடைப்பகுதி என்பதால் சமீபத்தில் பெய்த மழையில் அவரது உடல் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் அல்லது வனவிலங்குகள் அதனை அழித்து இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story