சுங்கக் கட்டணத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் - மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை
தமிழகத்தில் சாலை அமைப்பதற்காக செய்யப்பட்ட முதலீடு, சுங்கக் கட்டண வசூல் மூலம் திருப்பி எடுக்கப்பட்ட தேசிய நெடுஞ் சாலைகளில், கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தி உள்ளது.
சுங்கக் கட்டண வசூல் தொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதியுள்ளார். தேசிய நெடுஞ்சாலைகளை முறையாக பராமரிக்காமல், அதிக சுங்கக் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். மேலும், பராமரிக்காத சாலைக்கு சுங்கக் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவது நீதிபதிகள் தொடங்கி, அனைத்து தரப்பினரின் கண்டனத்துக்கு ஆளாகி வருவதையும், அந்த கடிதத்தில் ராமதாஸ் சுட்டிக்காட்டி உள்ளார். தேசிய நெடுஞ்சாலை எண்-48, நாட்டின் மிகவும் நீளமான சாலை என்பது மட்டுமின்றி, மிகவும் முக்கியமான சாலையும் கூட என தெரிவித்து உள்ள ராமதாஸ், சென்னை முதல் வாலாஜா பேட்டை வரை, தரமான 8 வழிச் சாலையாக மாற்ற ஆணையிட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.மேலும், பல சுங்கச் சாலைகளுக்காக செய்யப்பட்ட முதலீடு, கட்டண வசூல் மூலம் எடுக்கப்பட்ட பின்னரும், சுங்கக்கட்டண வசூல் தொடர்வதாக ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். தமிழகத்தில், ஒரு நெடுஞ்சாலை அமைக்க 536 கோடி ரூபாய் மட்டுமே செலவான நிலையில், இதுவரை ஆயிரத்து 248 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி, இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அலுவலக உயரதிகாரிகள் உள்ளிட்டோரைக் கொண்ட ஆணையம் அமைத்து விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
Next Story