மின்னல் தாக்கி விவசாய கூலி தொழிலாளர்கள் 4 பேர் பலி
புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கியதில் விவசாய பணியில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
வைத்தூர் கிராமத்திலிருந்து செம்பாட்டூர் கீழமுட்டுக் காடு பகுதிக்கு 38 பெண்கள் விவசாய கூலி வேலைக்கு சென்றுள்ளனர். கடலை பறிக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டபோது பலத்த மழை பெய்ததால் அருகில் இருந்த கூடாரம் ஒன்றில் நின்றுள்ளனர். அப்போது, பலத்த சப்தத்துடன் இடியும் மின்னலும் தாக்கியது. இதில், விஜயா, சாந்தி, லட்சுமி அம்மாள், கலைச்செல்வி ஆகிய 4 பெண்கள் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உறவினர்களையும், காயமடைந்தவர்களையும் புதுக்கோட்டை ஆட்சியர் உமா மகேஸ்வரி சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, முதலமைச்சர் நிவாரண நிதியை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இடி தாக்கியதில் கூலித்தொழிலாளி பலி
காஞ்சிபுரம் அருகே மரம் வெட்டிக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி இடிதாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. களியனூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கோபி குடும்பத்தோடு மரம் வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென இடி விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இடி தாக்கி பெண் பலி - இருவர் காயம்
திருவாடானை அருகே வயலில் வேலை செய்த பெண் இடி தாக்கி பலியானார். தேவகோட்டையை அடுத்த தச்சவயலை சேர்ந்தவர் மலர். இவர் திருவாடானையை அடுத்த ஊரணிக்கோட்டை கிராமத்தில் வயலில் கலை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென இடி தாக்கியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயம் அடைந்த இரு பெண்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Next Story