திருச்சி கொள்ளை: தமிழக போலீசாருக்கு சவாலாக இருக்கும் வடமாநில கொள்ளையர்கள் பற்றி செய்தி தொகுப்பு

தமிழக போலீசாருக்கு சவாலாக இருக்கும் வடமாநில கொள்ளையர்கள் பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு.
x
2012 பிப்ரவரி மாதம் 25-ம் தேதி சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள வங்கிகளில் வடமாநிலத்தை சேர்ந்த 5 பேர், தொடர் கொள்ளையில் ஈடுபட்டனர்.  அடையாறு பகுதியில் பதுங்கி இருந்த அவர்களை, போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.

2012 மே மாதம் தர்மபு‌ரி‌யி‌ல் பிரபலமான நகை‌க்கடை‌‌யி‌ல் நுழைந்த
வடமாநில கொள்ளையர்கள் 9 பேர், கேஸ் வெல்டிங் மூலம், கடையின் கதவை அறுத்து கொள்ளை அடிக்க முயன்றனர். அப்போது அலாரம் ஒலித்ததால், அவர்கள் போலீசாரிடம் சிக்கினர். இதனால் 5 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் தப்பின.

2016-ம் ஆண்டு சேலம்-சென்னை ரயிலில் ஆறு  கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கில் வடமாநில கொள்ளையர்கள் சிலரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். பல்வேறு நகை கொள்ளை வழக்குகளில் அவர்களுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஏடிஎம் மையங்களில் வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வந்தனர். அவர்களை 2017-ம் ஆண்டு,  நாமக்கலில், போலீசார் கைது செய்தனர்.

2017 நவம்பர் மாதம் சென்னை கொளத்தூரில் மகேஷ்குமார் என்பவரது நகைக்கடையின் மேற்கூரையை துளையிட்டு 3 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க சென்னை போலீசார், ராஜஸ்தான் சென்றனர். அங்கு கொள்ளையர்களுக்கும், போலீசாருக்கும் நடந்த துப்பாக்கிச்சூட்டில், கொளத்தூர் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் உயிரிழந்தார்.

2018 மார்ச் மாதம், சென்னை திருமங்கலத்தில் பிரபல நகைக்கடையில் கடையின் மேற்கூரையில் துளையிட்டு, 9 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இதே ஆண்டு மார்ச் மாதம், சென்னை கே.கே.நகரில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் துளையிட்டு, வங்கி லாக்கரை உடைத்து 30 லட்ச ரூபாய் பணம் மற்றும் ஏராளமான நகைகளை நேபாள கொள்ளையர்கள் அள்ளி சென்றனர். பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

2018-ம் ஆண்டு கோவையில்3 ஏடிஎம் மையம்களில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன. இதில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த எட்டு பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

2018 நவம்பர் மாதம், புதுச்சேரியில் ஏடிஎம் மையங்களில் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி, வடமாநில கும்பல் கொள்ளையடித்தது. அந்த பணத்துடன் விமானத்தில் பறந்து சென்ற அந்த கும்பலை, பின்னர் போலீசார் கைது செய்தனர்.

2019 செப்டம்பர் மாதம் சென்னை நங்கநல்லூரில் தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 120 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கில், வடமாநில பஹ்ரியா கொள்ளையர்களை உத்தரப்பிரதேசத்தில் வைத்து சென்னை போலீசார் கைது செய்தனர்.

2019 மே மாதம், ரயில் பயணிகளிடம் நள்ளிரவில் கத்தி முனையில் மிரட்டி, தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பீகார் உள்ளிட்ட வடமாநில கொள்ளையர்களை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

வேலை தேடி தமிழகத்திற்கு வரும் வடமாநில இளைஞர்கள் சிலர், தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவது, பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கொள்ளையர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினாலும், கடும் தண்டனை கொடுத்தாலும், குற்றங்கள் குறைந்தபாடில்லை.... 




Next Story

மேலும் செய்திகள்