செயலி மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த நிறுவனம் : குவியும் புகார்கள் - 8 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னையில் பணப் பரிவர்த்தனை செய்யும் நிறுவனம் நடத்தி, செயலிகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்த கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை கந்தன்சாவடியை தலைமையிடமாக கொண்டு ஓப்போ டேப் இ-சொலியுஷன் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. ரீசார்ஜ் செய்ய உதவிடும் வகையில் செயலி உருவாக்கி, பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டு வந்த இந்நிறுவனத்தில் பலர் வினியோகஸ்தர்களாக இணைந்து, பணத்தை முதலீடு செய்து வந்துள்ளனர். இந்நிலையில், இந்த செயலியானது மூன்று மாதத்திற்கு பிறகு திடீரென செயல்படாத நிலையில், அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள், அலுவலகத்தை காலி செய்து விட்டு திடீரென மாயமாகிவிட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன், ஆலந்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்குப்பதிவு செய்ய ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அந்நிறுனவத்தின் நிர்வாகி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அந்த நிறுவனம், வெவ்வேறு நகரங்களில் வெவ்வேறு பெயர்களில் செயலியை உருவாக்கி மோசடிகளை செய்து வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பலர் தொடர்ந்து புகார் அளித்த வண்ணம் உள்ளதால் குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் 3 ஆயிரம் கோடிக்கு மேல் அந்த நிறுவனம் நாடு முழுவதிலும் பண மோசடி செய்திருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
Next Story