நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் இர்ஃபான் தந்தை முகமது சஃபி கைது
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்ஃபான் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
நீட்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த, தேனி மருத்துவக் கல்லூரி மாணவர் உதித் சூர்யா கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடமும், அவரின் தந்தையிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் மேலும் பலருக்கு போலீசார் வலை வீசியுள்ளனர்.
நீட் தேர்வு மோசடி செய்ய இடைத்தரகர்களாக செயல்பட்ட 2 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் தேடி வரும் நிலையில்,'சந்தேகத்தின் பேரில் அபிராபி என்கிற மாணவி , ராகுல், பிரவீன் என இரண்டு பேரை போலீசார் விசாரித்து வந்தனர்.
இவர்களில் மாணவர் பிரவின், ராகுல் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானதால் மாணவர்களும், அவர்களது தந்தையும் கைது செய்யப்பட்டு போலீசார் நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.
இதற்கிடையே, மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ்களை சோதனை செய்ய அழைப்பு விடுக்கப்பட்டபோது தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் இர்ஃபான் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதையொட்டி சந்தேகமடைந்த போலீசார் அவர் குறித்து விசாரித்தபோது, இர்ஃபான் கடந்த 6 ஆம் தேதியில் இருந்து கல்லூரி வரவில்லை என்பதும், மொரிஷியஸ் நாட்டுக்கு தப்பிச் சென்றதையும் போலீசார் கன்டறிந்தனர்.
இர்ஃபானின் தந்தை முகமது சஃபி, நீட் ஆள்மாறாட்ட மோசடியில் மூளையாக இருந்து செயல்பட்டது தெரிய வந்துள்ளதால், அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே, ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக , தனியார் மருத்துவக் கல்லுரி முதல்வர், கண்காணிப்பாளர்கள் ஆகியோரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் புகைப்படம் ஒத்துப்போகவில்லை என விசாரணைக்கு அழைக்கப்பட்ட மாணவி அபிராமியை போலீசார் விடுவித்துள்ளனர்.
ஹால் டிக்கெட் புகைப்படமும், சான்றிதழ் புகைப்படமும் ஒப்பிடப்பட்டு, தடய அறிவியல் மூலம் உறுதி செய்த பின்னர் தவறு நடக்கவில்லை என்பதை சி.பி.சி.ஐ.டி எஸ்.பி விஜயகுமார் கூறியுள்ளார்.
நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் தோண்டத் தோண்ட புதிய புதிய விவகாரங்கள் சிக்குவதால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story