நாங்குநேரி தொகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேறுமா?
இடைத்தேர்தலுக்கு தயாராகிவரும் நாங்குநேரி தொகுதி மக்கள், அரசியல் கட்சிகள் பல ஆண்டுகளாக கூறிவரும் தேர்தல் வாக்குறுதிகளை இந்த தேர்தலிலாவது நிறைவேற்றுவார்களா என்ற ஏக்கத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் இரண்டு தொகுதிகளில் ஒன்று நாங்குநேரி சட்டமன்ற தொகுதி. இத்தொகுதிக்குட்பட்ட களக்காடு வட்டாரத்தில் ஆண்டுதோறும் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக களக்காடு, திருக்குறுங்குடி பகுதிகளில் விளைவிக்கப்படும் நேந்திரன், ரசக்கதலி ரக வாழைகளுக்கு வெளி மாநிலங்களில் அதிக மவுசு உள்ளது.
இத்தனை சிறப்புமிக்க களக்காட்டில் வாழைத்தார் சந்தை, குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்பது இங்குள்ள வாழைத்தார் விவசாயிகளின் பல ஆண்டு ஏக்கமாக உள்ளது. தங்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க, களக்காட்டில் சந்தை அமைய வேண்டும் என்றும் கூறுகின்றனர் அப்பகுதி விவசாயிகள். இது ஒருபுறம் இருக்க, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடையன்குளமோ, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் கிடப்பதாக கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். குளத்தை தூர்வாரி கொடுப்பதாக உறுதி தரும் அரசியல் கட்சிக்கே தங்கள் வாக்கு என்றும் திட்டவட்டமாக கூறுகின்றனர் இப்பகுதி மக்கள். களக்காடு சுற்றுவட்டார விவசாயிகள், கடையன்குளம் கிராம மக்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா. அல்லது வழக்கம் போல் தேர்தல் வாக்குறுதியாக மட்டும் கடந்து போகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
Next Story